பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவீன இயந்திரம் பயன்படுத்தி பாதாள சாக்கடை சீரமைப்பு: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

தாம்பரம் : வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு, தாம்பரம் மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் அழகுமீனா மேற்கொண்டு வருகிறார். அதன்படி மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் உள்ள மழைநீர் கால்வாய்களில் தேங்கி நிற்கும் குப்பை கழிவுகள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டு வருகிறது.

மேலும், பாதாள சாக்கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவுகளை அகற்றுவதற்காக நவீன நீர் உறிஞ்சும் இயந்திரம் ஒன்று தாம்பரம் மாநகராட்சிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் பாதாள சாக்கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவுகளை மொத்தமாக உறிஞ்சி எடுத்து, பின்னர் குப்பை மற்றும் மண் கழிவுகளை மட்டும் தனியாக சேகரித்துக் கொண்டு மீண்டும் தண்ணீரை மட்டும் பாதாள சாக்கடையில் விட்டுவிடும். இவ்வாறு செய்வதன் மூலம் பாதாள சாக்கடைகளில் அடைப்புகள் இல்லாமல் மழைக்காலங்களில் தண்ணீர் எளிதாக செல்வதுடன் குடியிருப்பு பகுதி மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படாமல் இருப்பதுடன் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பார்கள்.

தாம்பரம் மாநகராட்சியை பொருத்தவரை மழை காலங்களில் 2வது மற்றும் 3வது மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் தான் மழைநீர் வடிகால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியாமல் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் நிற்கும். எனவே, நேற்று முதல் கட்டமாக 2வது மண்டலத்துக்கு உட்பட்ட கீழ்கட்டளை பகுதியில் நவீனநீர் உறிஞ்சும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு பாதாள சாக்கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவுகள் அகற்றப்பட்டது. இப்பணிகளை தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, ஒரு வாரத்திற்குள் 2 மற்றும் 3வது மண்டலங்களில் எங்கெல்லாம் கால்வாய்களில் அடைப்புகள் உள்ளதோ அவற்றை முழுமையாக அப்புறப்படுத்தி இருக்க வேண்டும் மற்ற மண்டலங்களில் கால்வாய் அடைப்புகள் போன்ற பிரச்னைகள் ஏதாவது இருந்தால் அவற்றையும் ஒரு வாரத்திற்குள் முழுமையாக அகற்றி மழைக்காலத்தின்போது பொதுமக்களுக்கு எந்த ஒரு சிரமமும், இடையூறும் இல்லாமல் இருக்க செய்ய வேண்டும் என மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

The post பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவீன இயந்திரம் பயன்படுத்தி பாதாள சாக்கடை சீரமைப்பு: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: