பல்வேறு நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பணி தீவிரம்


சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் தென் மாவட்ட பேருந்துகள் வந்து செல்லும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகொண்டு வரப்பட்டது. 90% அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும் 10% பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருமழிசை பெரும்புதூர் இடையே பூந்தமல்லி வழியாக பேருந்துகள் செல்லும் வகையில் புதிய பேருந்து நிலையம், குத்தம்பாக்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. 25 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலோ, தண்ணீர் தேக்கமோ இருக்க கூடாது எனவும் திட்டமிட்டுள்ளனர்.

குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி போன்ற மேற்கு பகுதிகளுக்கு செல்லும் 70 பேருந்துகளும், தனியார் சேவைகளுக்காக 30 பேருந்துகளுக்கும், எம்டிசி பேருந்துகளுக்கு 30 பேக்களும், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தங்கும் இடம், கடைகள் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், 200 நான்கு சக்கர வாகனங்கள், எஸ்கலேட்டர், குடிநீர் வசதி, சிசிடிவி கேமரா மற்றும் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகளும் மல்டி லெவல் பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் ஜனவரி மாதத்திற்குள் இந்த பேருந்து நிலையம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

The post பல்வேறு நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: