230 நாட்களை கடந்த சிறை வாழ்க்கை..அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17-வது முறையாக நீட்டிப்பு!!

சென்னை : அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14ல் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் 3,000 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். செந்தில் பாலாஜி மூன்று முறை தொடர்ந்த ஜாமீன் மனுக்களும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு ஜாமீன் கோரப்பட்ட போதும் அவை நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டன.

இந்த நிலையில், இந்த வழக்கில் செந்தில்பாலஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 17வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இரு வாரம், ஒரு வாரம் என நீட்டிக்கப்படும் நீதிமன்ற காவல் தற்போது இரு நாள்கள் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சுமார் 230 நாட்களை கடந்தும் ஜாமீன் கிடைக்காமல் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி 2வது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த ஜாமீன் மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

The post 230 நாட்களை கடந்த சிறை வாழ்க்கை..அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17-வது முறையாக நீட்டிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: