ஆரைக்கீரையின் மருத்துவப் பண்புகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

நீர்வளம் நிறைந்த இடங்களிலும், வாய்க்கால் ஓரங்களிலும் வளர்ந்து காணப்படும் ஒருவகை களைச்செடியே ஆரைக்கீரை என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் கீரைகள் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவில் வருவது முருங்கை, அகத்தி, அரைக்கீரை, முளைக்கீரை, மணத்தக்காளி கீரை போன்றவையே. ஆனால், இந்த ஆரை கீரை களைச்செடியாக அனைவராலும் அறியப்பட்டாலும் இது ஒரு சிறந்த மூலிகைக்கீரையாக நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஆரை என்பது நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட கொடிவகையைச் சேர்ந்த தாவரமாகும். இவை செங்குத்தாக வளரும் நீர்வாழ்த்தாவரமாகும். ஆரை கீரைக்கு ஆராக்கீரை, ஆலாக்கீரை, காட்டுப்பள்ளி குரந்தம், நீறாரை, நீர் ஆரைக்கீரை எனப் பல பெயர்கள் உண்டு. மேலும் அதில் காணப்படும் இலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நான்கு இலைகளைக் கொண்டவை ஆரை எனவும் மூன்று இலைகளைக் கொண்டவை புளியாரை எனவும். ஓரிதழ் உடையவை வல்லாரை எனவும் கூறப்படுகிறது. ஆடி முதல் மார்கழி மாதம் வரை வாய்க்கால்களில் அதிகமான அளவில் ஆரைக்கீரை வளர்ந்திருப்பதைக் காணமுடியும்.

ஆரைக்கீரையின் அறிவியல் பெயர்: மார்சீலியா குவட்ரிபோலியா

தாவரக் குடும்பம்: மார்சிலேசியே.

ஆரைக்கீரை தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும், வாய்க்கால் பகுதிகளிலும் காணப்படுகிறது. இவற்றில் சோடியம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆகையால் இக்கீரை உடலுக்கு நல்ல வலிமையைத் தரக்கூடியது. மேலும் பண்ணை வீட்டில் உள்ள நீர்நிலைகளில் நிறைந்து காணப்படுவதினால் பண்ணைக்கீரை எனவும் ஆரைக்கீரை அழைக்கப்படுகின்றது.

ஆரைக்கீரை ஐரோப்பா மற்றும் ஆசியாவைத் தாயகமாக கொண்டது. இக்கீரை இந்தியா, ஐரோப்பா, சைபீரியா, சீனா, ஜப்பான், வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் மிதமான வெப்பமண்டலம் கொண்ட நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.

ஆரைக்கீரையில் காணப்படும் தாவர மூலக்கூறுகள்

மார்சிலின், மார்சைல்ராஜினின், கிளைக்கோஸ்பிளைவோன், பீட்டாசைட்டோஸ்டிரால் மற்றும் குளுக்கோ சைல்சாந்தோன் போன்ற மூலக்கூறுகள் காணப்படுவதின் காரணமாக ஆரைக் கீரை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

ஆரையின் மருத்துவ பண்புகள்

இந்தக் கீரை கொண்டுள்ள தாதுக்களின் காரணமாக வலிப்பு நோய்க்கு மருந்தாக சித்தர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. மேலும் நரம்புத்தளர்ச்சி, கை,கால் நடுக்கம் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் ஆரைக் கீரையை சாப்பிடலாம்.

இந்தக் கீரையின் இலையை நீரில் அலசி வாயில் போட்டு மென்று தின்றால் வாய்ப்புண் குணமாகும் எனக் கூறப்படுகிறது. ஆரையை வாரம் ஒருமுறை சூப்பாக செய்து சாப்பிட்டுவர சரும நோய்கள், மலச்சிக்கல், பித்தம் போன்றவை சீராகும். குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னையை போக்குகிறது. மன அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இருப்பினும் இக்கீரையின் பல்வேறு பயன்களை அறிந்தாலும் இக்கீரையை சரியாக அடையாளம் கண்டு உரிய முறையில் பயன்படுத்துவது நலம்.

குணப்பாட நூலில் ஆரையின் பண்புகள்
நீர் ஆரைக்கீரையின் குணம் – இதுவே ஆரைக்கீரை
தின்றா லுரிசைதருந் தீராப் பயித்தியத்தைப்
பொன்றாத நீரிழிவைப் புண்ணாரை – யென்றுமிந்த
வூராரைச் சாராம லோட்டிவிடு நாலிதழால்
நீராரைக் கீரையது நீ.

ஆரை, சத்து மிகுந்த கீரையாகும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். தாகம் தணிக்கும். இது இனிப்புச் சுவையுடையது. பசியைத் தூண்டும் தன்மை உடையது.

ஆரைக்கீரை பயன்படுத்தும் முறைகள்

நீரழிவு நோய் கட்டுப்பட தினமும் சிறிதளவு ஆரைக்கீரை உணவுடன் சேர்த்து சாப்பிட்டுவர வேண்டும்.தாய்ப்பால் சுரப்பை நிறுத்த கீரையைச் சமைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர வேண்டும்.சிறுநீர்க்கட்டு சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குணமாக ஆரை இலையை மைய அரைத்து, எலுமிச்சம்பழ அளவு எடுத்து, தேவையான அளவு எருமை மோரில் கலந்து குடித்துவர வேண்டும். தினமும் இரண்டு வேலைகள் இவ்வாறு செய்யலாம்.

சிறுநீருடன் இரத்தம் வருதல் கட்டுப்பட ஆரை இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து, 30 கிராம் தூளை அரை லிட்டர் நீரில் போட்டு, பாதியாகக் காய்ச்சி, பாலும், கற்கண்டும் கலந்து குடித்து வர வேண்டும். காலை, மாலை வேளைகளில் இவ்வாறு செய்யலாம்.

The post ஆரைக்கீரையின் மருத்துவப் பண்புகள்! appeared first on Dinakaran.

Related Stories: