இக்கூட்டத்தில் மக்களைத் தேடி மேயர் சிறப்பு முகாம்களில் மண்டலங்கள் வாரியாக பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மேயர் விரிவாக ஆய்வு செய்து, மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கண்டிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மேயர் தெரிவித்ததாவது: மக்களைத் தேடி மேயர் சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதை பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், தொடர்புடைய துறைகளைச் சார்ந்த மனுக்கள் மீதும் துறை அலுவலர்களுடன் மாநகராட்சி அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு விரைந்து முடித்து, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பணியாற்றிட வேண்டும்.
மக்களைத் தேடி மேயர் சிறப்பு முகாம்களில் பொதுமக்களிடமிருந்து இதுவரை 30.05.2023 அன்று இராயபுரம் மண்டலத்தில் 333 மனுக்கள் பெறப்பட்டு 331 மனுக்கள் மீதும், 31.05.2023 அன்று திரு.வி.க.நகர் மண்டலத்தில் 241 மனுக்கள் பெறப்பட்டு 190 மனுக்கள் மீதும், 05.07.2023 அன்று அடையாறு மண்டலத்தில் 315 மனுக்கள் பெறப்பட்டு 301 மனுக்கள் மீதும், 10.08.2023 அன்று திருவொற்றியூர் மண்டலத்தில் 235 மனுக்கள் பெறப்பட்டு 179 மனுக்கள் மீதும், 06.10.2023 அன்று அம்பத்தூர் மண்டலத்தில் 516 மனுக்கள் பெறப்பட்டு 190 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது தொடர்புடைய துறைகளின் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு உரிய தீர்வினை காண அனைத்து அலுவலர்களும் பணியாற்றிட அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னைப் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம், உணவுப் பொருள் வழங்கல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, அரசு கேபிள் டிவி, இ-சேவை மையம், சென்னை மாநகர காவல்துறை, சமூக நலத்துறை, வருவாய்த்துறை, மகளிர் திட்டம், பொதுப்பணித்துறை, மாநகரப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின்சார வாரியம், சென்னை மாநகரப் போக்குவரத்துத் துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த மனுக்கள் மீது தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு தீர்வினைக் காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மதிப்பிற்குரிய துணை மேயர் மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) ஆர்.லலிதா, வட்டார துணை ஆணையாளர்கள் கே.ஜெ.பிரவீன் குமார், (மத்தியம்), எம்.பி.அமித், (தெற்கு), கட்டா ரவி தேஜா, (வடக்கு) மற்றும் தலைமைப் பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள், தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மக்களைத் தேடி மேயர் சிறப்பு முகாம்: மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மேயர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.