மாமல்லபுரம் அருகே இசிஆர் சாலையில் 28 ஏக்கரில் ரூ.23 கோடியில் சிட்கோ சிற்ப பூங்கா: பணிகளை விரைவில் தொடங்க சிற்பிகள் கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே இசிஆர் சாலையில், 28 ஏக்கரில் ரூ.23 கோடியில் சிட்கோ சிற்ப பூங்கா அமையயுள்ளது. அந்த பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென சிற்பிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாமல்லபுரம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கற்சிற்பங்களும், புராதன சின்னங்களும் தான். இங்கு, கடந்த 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னர்கள் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூணன் தபசு, வெண்ணெய் உருண்டைபாறை, புலிக்குகை, கிருஷ்ணா மண்டபம், பழைய கலங்கரை விளக்கம், மகிஷாசூரமர்த்தினி உள்பட பல்வேறு சிற்பங்களை பாறைகளை குடைந்து செதுக்கினர்.
மேலும், இந்த சிற்பங்கள் 1984ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பின் மரபுச்சின்ன பட்டியலில் இடம் பெற்றது.

தற்போது, பல்லவ மன்னர்கள் செதுக்கிய சிற்பங்கள் இன்றளவும் கம்பீரமாக காட்சி தருகிறது. இங்கு, வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிற்பங்கள் மீது ஆர்வம் கொண்டு, சிற்பம் செதுக்கும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். மேலும், சிற்ப பயிற்சி பெறுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆண்டு இறுதியில் மாமல்லபுரம் வருகின்றனர். அப்படி, வரும் வெளிநாட்டு பயணிகள் இங்கு 3 மாதங்கள் ஓட்டல், தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி, சிற்பிகள் செதுக்கிய சிலைகள் மீது ஆர்வம் கொண்டு தங்களுக்கு பிடித்த சின்ன, சின்ன சிலைகளை வாங்கி தங்களது வீடுகளில் உள்ள அலமாரியில் வைத்து அழகு பார்ப்பது வழக்கம்.

மேலும், ஒருசில பயணிகள் சிற்பக் கலைகளின் மீது பிரியம் கொண்டு தன்னை சிற்பியாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, இங்குள்ள சிற்பக் கூடங்களுக்கு சென்று கருங்கல், பச்சைக்கல், மாவுக்கல், மார்பில் கல் ஆகியவைகளில் ஒரு கல்லை தேர்ந்தெடுத்து, தங்களுக்கு பிடித்த கடவுள் சிலை, மாடர்ன் சிலைகளை உளியால் செதுக்கி தங்களது நாட்டிற்கு திரும்பி செல்லும்போது, கையோடு எடுத்து செல்கின்றனர். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் சிற்பத் தொழில் நடந்தாலும், மாமல்லபுரத்தில் செய்யப்பட்ட சிலைகளுக்கு மிகப் பெரிய கிராக்கி உள்ளது.

இங்கு கருங்கல், பச்சைக்கல், வெள்ளைக்கல், மாவுக்கல் உள்ளிட்டவைகளில் சுவாமி சிலை, அலங்கர வளைவு, அழுகு சிலைகள், பூங்காவில் வைக்க யானை சிலைகள் செதுக்கப்படுகிறது. மேலும், இங்கு செய்யப்படும் பஞ்சலோக சிலைகளுக்கு கடும் கிராக்கி உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த அளவு சிற்பக் கலைஞர்களே காணப்பட்டனர். அதில், சிலர் படித்தும், சிலர் படிக்காமல் கற்றுக்கொண்டும் இத் தொழிலில் ஈடுபடுகின்றனர். இங்கு, தமிழ்நாடு அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரி தொடங்கிய பிறகு, ஏராளமானோர் படித்து பட்டம் பெற்று சிற்ப கலைக்கூடம் நடத்துகின்றனர். இங்கு, 500க்கும் மேற்பட்ட சிற்பக் கலைக்கூடங்களில் 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை செய்கின்றனர்.

இந்நிலையில், மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் ஈசிஆர் சாலையொட்டி கடம்பாடி பகுதியில் சிற்பக் கலைஞர்கள் மேம்பாட்டிற்காக 28 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, சிட்கோ சிற்ப பூங்கா அமைக்க கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில் ரூ.23 கோடி ஒதுக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்த முட்செடிகள் அகற்றப்பட்டு இடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சமன்படுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்தது. தொடர்ந்து, சில நிர்வாக காரணங்களுக்காக பணிகள் தடைபட்டது.

சிட்கோ சிற்ப பூங்கா இங்கு அமையும் பட்சத்தில் 500 சிற்பக் கலைஞர்களும், 1,500க்கும் மேற்பட்டோர் பயனடைந்து, சிற்பத் தொழில் மேம்படும். தற்போது, தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அறிவிப்பு, பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருக்கழுக்குன்றம் அடுத்த முள்ளிக் கொளத்தூர் பகுதியில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கில், 23 ஏக்கரில் ரூ.14 கோடி மதிப்பில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவித்தார்.

இதுகுறித்து, பட்டதாரிகள் கூறுகையில், ‘திருக்கழுக்குன்றம் தாலுகாவில் 54 ஊராட்சிகள் மற்றும் செய்யூர், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் டிகிரி, டிப்ளமோ, இன்ஜினியரிங், 12ம் வகுப்பு முடித்த ஏராளமான இளைஞர்கள் – பெண்கள் உள்ளனர். இங்குள்ள, இளைஞர்கள் வேலைக்காக செங்கல்பட்டு அடுத்த மஹேந்திரா சிட்டி, மறைமலைநகர், காஞ்சிபுரம் அடுத்த பெரும்புதூர், சுங்குவார்சத்திரம், திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம், நாவலூர், சிறுசேரி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு செல்கின்றனர். மேலும், ஒருசில இளைஞர்கள் படித்து விட்டு வேலைதேடி அலைகின்றனர். வேலை வாய்ப்பிற்கு நீண்டதூரம் செல்வதை தவிர்க்கவும், வேலை வாய்ப்பு இல்லாத இடங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகப்படுத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், திருக்கழுக்குன்றம் அடுத்த முள்ளிக்கொளத்தூர் பகுதியில் மாநில சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் சிப்காட் என்னும் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க முடிவெடுத்துள்ளது. மேலும், ஏராளமான இல்லத்தரசிகள் படித்து முடித்துவிட்டு, வீட்டில் முடங்கி உள்ளனர். தற்போது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இளைஞர்களின் நலனை கருத்தில் தமிழ்நாடு சிப்காட் எனும் தொழிற்பேட்டையை ஆங்காங்கே ஏற்படுத்தி வருகிறது. இங்கு, சிப்காட் பணி தொடங்கும் போது இளைஞர்கள் மற்றும் பெண்கள் மட்டுமின்றி கொத்தனார், பிளம்பர், வெல்டர், டிரைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். எனவே, தமிழக அரசு மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், செய்யூர், மதுராந்தகம் மற்றும் சுற்றுப்புற கிராமத்தில் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்றனர்.

* தமிழக அரசுக்கு நன்றி
இது குறித்து மூத்த சிற்பிகள் கூறுகையில், ‘மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில் சிற்பக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில், ரூ.23 கோடியில் சிற்ப பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2021ம் ஆண்டு மானியக் கோரிக்கையில் அரசு அறிவித்தது. அதன்பிறகு, அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, அத்திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் புத்துயிர் பெற்று, பணிகள் தொடங்கும் தருவாயில் உள்ளது. சிற்பிகளின் வாழ்வாதாரம் மேம்பட சிற்ப பூங்கா கொண்டு வந்த தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் மூத்த சிற்பிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

* சிற்பம் செதுக்க கடைகள் ஒதுக்க வேண்டும்
சிட்கோ சிற்ப பூங்காவில் கட்டப்படும் கடைகள் பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும். அப்படி, வழங்கும் பட்சத்தில் தேவையான கற்களை கொண்டு வந்து சிற்பிகள் அங்கேயே சிலைகளை செதுக்கி விற்பனை செய்து தங்களது தொழிலை மேம்படுத்து கொள்வார்கள்.

* பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்
சிற்பிகள் மேம்பாட்டிற்காக கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி இசிஆர் சாலையொட்டி சிட்கோ சிற்ப பூங்கா அமைக்க அரசு அறிவித்தது. தொடர்ந்து, அங்கு பல்வேறு பணிகள் தொடங்கியநிலையில், திடீரென பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது, அங்கு அறிவிப்பு பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக அரசு சிற்ப பூங்கா பணிகளை தொடங்கி முடிக்க வேண்டும் சிற்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் அருகே இசிஆர் சாலையில் 28 ஏக்கரில் ரூ.23 கோடியில் சிட்கோ சிற்ப பூங்கா: பணிகளை விரைவில் தொடங்க சிற்பிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: