சென்னை பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியை சேர்க்க கோரிய வழக்கு: ஆளுநரிடம் கேட்டு தெரிவிக்குமாறு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக தேடுதல் குழுவை நியமித்து, தமிழக அரசு கடந்த செப்டம்பர் 13ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த குழுவினர், 3 பேரை தேர்ந்தெடுத்து பல்கலை வேந்தரான ஆளுநருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதி இடம் பெறவில்லை எனக் கூறி, தேடுதல் குழு நியமித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் பி.ஜெகன்னாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிப்பது தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை ஏற்காத நிலையில் அது அரசை கட்டுப்படுத்தாது என்றார். அதற்கு தலைமை நீதிபதி, பல்கலைக்கழக மானிய குழு விதிகளை அரசு ஏற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேர்வு குழுவின் நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது. தற்போது துணைவேந்தர் பணியில் உள்ளாரா, பதவிக்காலம் நீடிக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், தற்போது துணைவேந்தராக யாரும் இல்லை என தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கு முடிவு காணும் வரை துணைவேந்தர் நியமிக்கப்பட மாட்டார் என்று உத்தரவாதம் அளிக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது சம்பந்தமாக ஆளுநரின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

The post சென்னை பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியை சேர்க்க கோரிய வழக்கு: ஆளுநரிடம் கேட்டு தெரிவிக்குமாறு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: