இந்த சந்திப்பின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அமெரிக்காவும் தமிழ்நாடும் வலுவான பொருளாதார உறவை பல ஆண்டுகளாக கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது 400க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் பெருமளவில் முதலீடுகள் செய்து இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் அமேசான், கேட்டர்பில்லர், சி.டி.எஸ், ஐபிஎம் போன்ற பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பல்வேறு புதிய அமெரிக்க நிறுவனங்களும் சமீபத்தில் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன. இந்தியாவின் முதல் மூன்று தொழில்மயமான மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்று. இந்தியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த மாநிலமாகவும், ஆசியாவிலேயே முதல் மூன்று இடங்களில் ஒன்றாகவும் தமிழ்நாட்டை மாற்றுவதே எங்கள் நோக்கம்.
அதேபோல தமிழ்நாடு, முதலீட்டாளர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. திறமையான மனித வளம் மற்றும் அமைதியான தொழில் உறவுகள் தமிழ்நாட்டை முதலீட்டுக்கு உகந்த இடமாக ஆக்குகின்றன. மேலும், ஆட்டோமொபைல்ஸ் மற்றும் வாகன உதிரிபாகங்கள், மின்னணு வன்பொருள், தகவல் தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதற்கான மகத்தான வாய்ப்புகளை தமிழ்நாடு வழங்குகிறது. நாங்கள் சிறந்த சமூக உள்கட்டமைப்பை வழங்குவதுடன் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் கல்வி ஒத்துழைப்புகளை உருவாக்கவும் வளர்க்கவும் விரும்புகிறோம். டென்வர் மற்றும் சான் அன்டோனியோ நகரங்களுடன் சென்னையும், டோலிடோ நகரத்துடன் கோயம்புத்தூரும் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன.
அதன்படி, தமிழ்நாடு தனது அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வரும் ஜனவரி மாதத்தில் நடத்துகிறது. அதில் அமெரிக்க நிறுவனங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த, அமெரிக்கா இந்த மாநாட்டில் ஒரு கூட்டு நாடாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமெரிக்க நிறுவனங்கள் கலந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டார்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு: பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என முதல்வர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.