`லோன் ஆப்’பில் வாங்கிய கடன் டார்ச்சரால் விரக்தி; அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை; தெலங்கானாவில் மகள் கண்முன் விபரீதம்

திருமலை: லோன் ஆப் மூலம் வாங்கிய கடன் பிரச்னையால் தெலங்கானா பெண் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானா மாநில கல்வித்துறை அமைச்சர் சபிதா இந்திராரெட்டி. இவரது பாதுகாப்பு அதிகாரி பைசல்அலி (52). இவர் தனது குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியிருந்தாராம். இதுதவிர கடன் செயலி (லோன் ஆப்) மூலம் பல லட்சம் கடன் வாங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. கடன் கொடுத்த நிதி நிறுவனத்தினர் இவரை வீடு தேடி சென்றும், அடிக்கடி போன் செய்தும் கடனை திருப்பி செலுத்தும்படி தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் பைசல்அலி கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் வழக்கம்போல் அமைச்சரின் பாதுகாப்புக்கு பணிக்காக சீருடையில் பைசல்அலி சென்றார். இவர் பணிக்கு சென்ற சிறிதுநேரத்தில் இவரை தேடிக்கொண்டு கடன் கொடுத்த நிறுவனத்தினர் இவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அதற்கு குடும்பத்தினர், பைசல் அலி பணிக்கு சென்றதாக தெரிவித்தனர். அடிக்கடி நிதி நிறுவனத்தினர் வந்து பைசல் அலியை கேட்பதால் அவரது குடும்பத்தினர் வேதனை அடைந்தனர். தந்தையை தேடி நிதி நிறுவனத்தினர் வந்தது குறித்து தெரிவிக்க அவரது மகள் அமைச்சரின் வீட்டுக்கு சென்றார்.

ஆனால் அதற்குள் பைசல்அலி, அமைச்சரின் வீட்டருகே உள்ள டீ கடைக்கு சென்றார். அவரை தேடி அவரது மகள் டீக்கடைக்கு வந்துள்ளார். அங்கு தனது தந்தையிடம் கடன்காரர்கள் காலையிலேயே வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்வதாக கூறியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த பைசல்அலி, எதிர்பாராத வகையில் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தனது மகள் மற்றும் பொதுமக்கள் கண்முன் தனது தலையில் வைத்து சுட்டுக்கொண்டார். இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் ரத்த வெள்ளத்தில் அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். இதைக்கண்ட அவரது மகள் மற்றும் டீக்கடைக்கு வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உள்ளிட்டோர் துப்பாக்கி சத்தம் கேட்டு நாலாப்புறமும் சிதறி ஓடினர்.

இதுகுறித்து தகவலறிந்த ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் விரைந்து வந்தனர். இதேபோல் தகவலறிந்த அமைச்சர் சபிதா இந்திராரெட்டியும் சம்பவ இடத்துக்கு சென்று, நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். மேலும் அவரது மகளுக்கு ஆறுதல் கூறினார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், பைசல்அலி கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். தனது மகளின் கண்முன் யாரும் எதிர்பாராத வேளையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம்’ என தெரிவித்தனர்.

The post `லோன் ஆப்’பில் வாங்கிய கடன் டார்ச்சரால் விரக்தி; அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை; தெலங்கானாவில் மகள் கண்முன் விபரீதம் appeared first on Dinakaran.

Related Stories: