ங போல் வளை-யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

திரை விலகட்டும்!

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

நீங்கள் நண்பர்களோடு ஒரு புகைப்படம் எடுக்கிறீர்கள் எனில் அதை பார்க்கையில் முதலில் நீங்கள் எதை கவனிப்பீர்கள்? உங்களைத்தான் முதலில் பார்ப்பீர்கள். ஆம், நிச்சயமாகவே அந்தக் குழுவில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதைத்தான் முதலில் நம் கண்கள் தேடும். பின்னர்தான் மற்ற விஷயங்கள் அனைத்தும் கண்ணில் படும், இது எதை காட்டுகிறது?

இன்று எங்கு பார்த்தாலும் கைபேசியில் தன்னையே புகைப்படம் எடுத்து யாருக்கேனும் அனுப்பிக்கொண்டிருக்கும் கோடானகோடி மனிதர்களை இப்படி செய்யத்தூண்டுவது எது? இதற்கு ‘தன்முனைப்பு‘ என்று பெயர். இந்த சிறிய உயிர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்க விழைகிறது. ஆகவே, உள்ளே தான், தான் தான் என இயங்குகிறது. அதன் விளைவாக தனக்கான இடம், அடையாளம், இருப்பு, செயல், படைப்பு என வெளிப்படுகிறது. இது மனித இயல்புகளில் ஒன்று. இந்த இயல்பு இல்லாமல் இங்கே ஒருவர் இயங்க முடியாது. இந்த இயல்பை ‘அஹங்காரம்’ என்கிறது மரபு.

நாம் சொல்லக்கூடிய எதிர்மறை தன்மை மட்டுமே வாய்ந்த மூர்க்கத்தனமான ஆத்திரம் எனும் அர்த்தத்தில் இப்படி சொல்லப்படவில்லை. மாறாக, ‘அஹங்காரம்’ என்பது நம் அகம் செயல்பட முக்கியமான ஒரு கருவி. இந்தக் கருவி கட்டுப்பாட்டில் இருக்கும் வரை எல்லாம் சரியாக அமைகிறது. இந்த தன்முனைப்பு எனும் கருவி கட்டுப்பாட்டை இழக்கும்போது அனைத்து சிக்கல்களும் உருவாகிறது.

அந்த கட்டற்ற அஹங்கார நிலையை உடைப்பதுதான் பெரும்பாலான மரபுகளில் முதற்கட்ட பயிற்சியே. ஏனெனில், ஒருவரின் இந்த தன்முனைப்பு எனும் நிலைதான் அவரைப் பெரும் செயல்களை செய்யத் தூண்டுகிறது. அந்த செயலுக்கான ஆற்றலை வழங்குகிறது. அந்த ஆற்றலால் வெற்றிகள் சூழும் பொழுது ‘தன்முனைப்பு ‘கட்டற்று செயல்பட தொடங்குகிறது. அது தன்னை தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருக்க எந்த செயலையும் செய்யத் துணிகிறது. அந்த செயலால் தனக்கும் பிறருக்கும் சூழலுக்கும் தீமை விளையும் என்று தெரிந்தும் அச்செயலை ஒருவர் செய்யத் தொடங்குவர் என்பதால் ‘ஆணவமலம்’ என்று இதைக் குறிப்பிட்டு அதை ‘அறுத்தல்’ அல்லது ‘விட்டுவிடுதல் ‘ பற்றி விரிவாகப் பேசப்படுகிறது.

தத்துவத்தையும் அதற்கான பயிற்சிகளையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கும் மரபுகளான யோக மரபு போன்ற ஒரு துறையில் இது இன்னும் துல்லியமாகவும் விரிவாகவும் பேசப்பட்டு, இந்த தன்முனைப்பின் சாதக பாதகங்கள் விவாதிக்கப்பட்டு, அதன் அளவுகோல்களை நிர்ணயித்து அதற்கான பயிற்சிகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.நாம் ஏற்கெனவே சொன்னது போல, யோகமரபு ஒரு அறிவுரை சொல்லும் நூல்கள் அடங்கிய தொகுப்பு அல்ல. மாறாக, ஒவ்வொரு மனித இயல்பையும் அதற்கே உண்டான முறையில் புரிந்துகொண்டு, அதிலிருக்கும் சமநிலையின்மையைக் கையாள தேவையான கருவிகளை வழங்கும் ஞான -கர்ம மரபு.

இதில் ‘சந்தோசமாக இரு’ என்று அறிவுரை வழங்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக , நாம் சந்தோசமாக இல்லாமைக்கு காரணம் என்ன? சந்தோசமாக மாற செய்யவேண்டிய காரியம் என்ன? அதற்கான கருவி எது? என அனைத்தையும் வகுத்துச் சொல்லும் அனுபவ அறிவுப்பள்ளி.அப்படித்தான், ‘தன்முனைப்பு என்றும் ‘அஹங்காரம்’ என்பதையும் கையாள்கிறது. இங்கு தன்முனைப்பு என்பது மனதின் ஒரு பகுதி. அதாவது, மனம் செயல்படும் விதம் நான்கு வித கச்சாப் பொருட்களால் ஆனது என முன்னரே பார்த்தோம்.

அவை சித்தம், புத்தி, அஹம்காரம், மனம் என்கிற நான்கும் சேர்ந்ததுதான் ‘மனம் ‘என்கிற கருவி மற்றும் அதன் செயல்பாடு. இதில் ‘அஹம்காரம்’ தான் தன்னை முன்னிறுத்தி செய்யப்படும் செயல்கள் எல்லாவற்றையும் தூண்டுவது. நாம் மேலே சொன்ன ஒரு குழுமப் புகைப்படத்தில் தன்னைத் தேடுவதில் தொடங்கி, மாபெரும் ஆளுமையாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டே இருப்பது வரை அனைத்தும் இதன் செயல்பாடுகள்.

பெரிய ஆளுமைகள்கூட இதில் மாட்டிக்கொள்வதுண்டு. ஏதேனும் ஒரு புனைபெயரை இணைத்துக்கொள்ளுதல் அல்லது ஒரு பதவியை இணைத்துக்கொள்ளுதல் போன்ற சுய தம்பட்டம் அனைவருக்கும் நிகழ்வதுதான். இதிலிருக்கும் பெரும் சிக்கலே அப்படி தன்முனைப்பை வெளிப்படுத்துபவர்கள் சரியாக ‘கண்டுகொள்ளப்படாமல்’ போய்விட்டால் கொந்தளித்து விடுவார்கள். ஒரு குழந்தை பெற்றோரிடமிருந்து கவனத்தைப் பெற அழுது ஆர்ப்பாட்டம் செய்வது போல இவர்கள் தொடர்ந்து பலவாறு முயற்சி செய்வார்கள். ஒவ்வொருமுறையும் கண்டுகொண்டு பாராட்டினால், அந்தப் பாராட்டுக்கள் இல்லாமல் வாழ முடியாத நிலைக்குச் சென்றுவிடுவார்கள்.

நுகர்வு போலவே ‘தன்னகங்காரம்’ என்பதும் ஒருபோதும் நிறைவடையாது. ஆகவே யோகமரபு இதில் கவனமாக இருக்கச் சொல்கிறது. சுவாதிஷ்டானம் எனும் மையத்தில் ஆற்றலின்மை அல்லது அதீத ஆற்றல் இவை இரண்டுமே ஒருவருடைய அஹம்காரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. என்னால் எல்லாம் நிகழ்கிறது. நானே இதையெல்லாம் செய்கிறேன் எனும் தன்முனைப்பு எந்த அளவுக்கு ஜாக்கிரதையாக கையளவேண்டிய விஷயமோ அதே அளவுக்கு சுய காழ்ப்பும் தன்னால் இயலவில்லை என்கிற விரக்தி நிலையும் அஹங்காரத்தின் வெளிப்பாடே.

உதாரணமாக, தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரின் மரணத்தின்போது கடைசி நேரத்தில் அவருக்கு உதவ முடியவில்லை என அவருடைய மரணத்திற்கு பின் ஒருவர் நீண்ட காலம் துன்பப்படுகிறார் எனில், இதுவும் தன்முனைப்பின் வேறு வடிவமே.இந்த வெற்றி, விரக்தி இரண்டுமே தமோ குணம் மற்றும் ரஜோகுணத்தின் அம்சம் என்றும் இந்த குணங்கள் நிறைந்த மையம் அல்லது இதை தூண்டக்கூடிய மையம் என்பது சுவாதிஷ்டானம் என்றும் சொல்கிறது யோகம்.

அங்கிருந்தே, நமது அடிப்படை உணர்ச்சிகளும், காமம், உணவின் ருசி மீதான ஆவலும், சுகமான சூழலுக்கான ஏக்கமும், ஐம்புலன்களுக்குமான தூண்டுதலும் அது சார்ந்த நுகர்வும், நிகழ்கிறது. இந்த மையத்தின் ஆற்றலே ஒருவரை ‘தன்முனைப்பு’ மிக்க மனிதராக மாற்றுகிறது. அவருடைய ஆசைகளை நிர்ணயிக்கிறது. அதை அடைய துரத்துகிறது. ஒருவகையில் அப்படி அடிப்படை இச்சைகள் இல்லையெனில் இங்கு வாழ்வது சாத்தியமில்லாமல் போகலாம்.

ஆனால் இந்த சுவாதிஷ்டான மையத்தில், உயிராற்றலின் தேக்கநிலை வரும்பொழுது அனைத்தும் கைமீறிப்போகிறது.
சுவாதிஷ்டானத்தில் இருக்கும் காமம் உயிராற்றலால் நிர்வகிக்கப்படும் போது இனிய அனுபவமாகவும், பிராணன் எனும் உயிராற்றல் சமன் குலையும் போது, இதே காமம் வெறிச்செயலாக அல்லது குற்றவுணர்ச்சியாகவும் மாறுகிறது. இப்படி எல்லா அடிப்படை உணர்வுகளிலும் நிகழ்கிறது.

ஆகவே சாதகனுடைய இரண்டாம் நிலை பயிற்சிக் காலகட்டத்தில், தெரிந்தோ தெரியாமலோ சுவாதிஷ்டான மையத்தை நேர்நிலை ஆற்றல் மிக்க மையமாக மாற்றும் பயிற்சிகளை வழங்குவர். அதன் மூலம் சாதகன் தன்முனைப்பு எனும் சிறிய அகங்கார நிலையிலிருந்து, வேறு நிலைக்குச் செல்கிறான். பெரும் செயல்களில் ஈடுபட்டாலும் அல்லது வெற்றிகளையோ தோல்விகளையோ பெற்றாலும் அதன் உணர்ச்சிகர தாக்கத்திலிருந்து விடுபட்டு சமன் கொள்கிறான்.

இந்தப் பயிற்சிகள் மரபில் படிப்படியாக வழங்கப்படுகிறது. ஏனெனில் சில மிகத்திடமான ‘தான்’ எனும் கருத்தைக் கொண்டிருப்பர். அவர்களை படிப்படியாக ‘உடைப்பது’ அவசியம். முதலிலேயே அனைத்துவிதப் பயிற்சிகளையும் வாங்கிவிட்டால் ,அவர்களுடைய மாற்றத்தை அவர்களாலேயே தாங்கிக்கொள்ள முடியாது என்பதால், ஓர் ஆசிரியர் உதவியுடன் படிப்படியாக பெறவேண்டியுள்ளது. இது உலகம் முழுவதுமுள்ள எல்லா மரபுகளிலும் உள்ள சாதனா முறைதான். நாம் கேள்விப்படும் சித்தர்கள் சார்ந்த கதைகளில் சீடனை குரு அவனுடைய ஆணவம் முற்றிலுமாக உடையும் வரை, தொடர்ந்து சோதித்துக்கொண்டே இருப்பார். ஜென் கதைகளிலும்கூட இதைக் காண முடியும்.

இஸ்லாமிய சூஃபி ஞானியர் கதைகளிலும் இதை காண முடியும். அவர்கள் இந்த ‘தான்’ எனும் தன்மையை ஒட்டி ஏழு விதமான நிலைகளை ‘நப்ஸ்’ என்கின்றனர். ஒவ்வொன்றாக இந்த ஏழு நப்ஸ்களையும் ஆசிரியரின் உதவியுடனும் அவர்கள் தரும் ‘முராகாபா’ எனும் தியான முறைகள் மூலமாகவும் ‘சுயம்’ எனும் திரை விலக்கப்பட வேண்டும் என அமைத்திருக்கின்றனர். ஏனெனில் சாமானியனைவிட ஒரு சாதகனுக்கு ‘சுயம்’ எனும் இந்தத்திரை மிகப்பெரிய தடை.

கூர்மாசனம்

இந்தப் பகுதியில் நாம் , கூர்மாசனம் எனும் மரபார்ந்த பயிற்சியைக் காணலாம். முதுகுத்தண்டு மற்றும் நரம்பு மண்டலம் முழுவதையும் ஆரோக்யமாக வைத்துக்கொள்ள உதவும். கால்களை அகற்றிய நிலையில் அமர்ந்து படிப்படியாக முன்புறம் குனிந்து, மூட்டுப் பகுதியை சற்று மேலே தூக்கி கைகளை உட்புறமாகவும் பின்னோக்கியும் கொண்டு சென்று கைவிரல்களை பின்னால் கோர்த்துக்கொள்ளவும். இறுதி நிலையில் மூன்று முதல் பத்து மூச்சுகள் வரை இருக்கவும். இப்படி ஐந்து சுற்றுகள் செய்யலாம்.

The post ங போல் வளை-யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.

Related Stories: