நிலஅபகரிப்பு, பாலியல் துன்புறுத்தல் விவகாரம்; திரிணாமுல் நிர்வாகியை உடனே கைது செய்யுங்கள்!: கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: நிலஅபகரிப்பு, பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் தொடர்புடைய திரிணாமுல் நிர்வாகியை உடனே கைது செய்யுங்கள் என்று போலீசாருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டம் சந்தேஷ்காளி பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரின் கூட்டாளிகள், பொதுமக்களின் நிலங்களை மிரட்டி அபகரித்து, பெண்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டில் தொடர்புடைய ஷாஜஹான் ஷேக், அவரின் கூட்டாளிகள் மீது நடவடிக்கை கோரி சந்தேஷ்காளியில் ஏராளமான பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையத் தலைவர். எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி, மா.கம்யூ. மூத்த தலைவர் பிருந்தா காரத் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர்.

சந்தேஷ்காளி பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சந்தேஷ்காளி விவகாரம் தொடர்பாக ஷாஜஹான் ஷேக்கை, இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஆனால், நீதிமன்றத்தின் தலையீட்டால் ஷாஜஹான் ஷேக்கை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி முன்பு கூறினார். இந்நிலையில் நேற்று இவ்வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் முன் விசாரணைக்கு வந்த போது, ‘குற்றம்சாட்டப்பட்ட ஷாஜகான் ஷேக்கை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இவ்விகாரத்தில் மாநில அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘பாலியல் பலாத்காரம் தொடர்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 42 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

 

The post நிலஅபகரிப்பு, பாலியல் துன்புறுத்தல் விவகாரம்; திரிணாமுல் நிர்வாகியை உடனே கைது செய்யுங்கள்!: கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: