கும்மிடிப்பூண்டி அருகே காலி குடங்களுடன் குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்; அரசு பேருந்து சிறை பிடிப்பு: போலீசார் சமரசம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் வழங்க ேகாரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. கும்மிடிப்பூண்டி அருகே பூங்குளம் ஊராட்சி ரெட்டிபாளையம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இதை ஒட்டியுள்ள சுண்ணாம்புகுளம் ஊராட்சி முழுவதுமே கடல்சார் நீர்நிலையை ஒட்டியுள்ளதால், உப்புத் தன்மையுடைய குடிநீர் மட்டுமே கிடைப்பதாக கூறப்படுகிறது. எனினும், ரெட்டிப்பாளையம் கிராமத்தில் சுவை மிகுந்த குடிநீர் கிடைப்பதால், சுண்ணாம்புகுளம் ஊராட்சி உள்பட இதர பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதனால் ரெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீரேற்றப்படாததால் அப்பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், பூங்குளம் ஊராட்சி பெண் தலைவர் வெளியூரில் இருப்பதால், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், ரெட்டிபாளையம் கிராமத்தில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி, நேற்று காலை சுண்ணாம்புகுளம் – பொன்னேரி செல்லும் சாலையில் அரசு பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை வழிமறித்து, ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து ஆரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ‘‘சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கிறோம்,’’ என சமரசம் பேசினர். இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.

The post கும்மிடிப்பூண்டி அருகே காலி குடங்களுடன் குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்; அரசு பேருந்து சிறை பிடிப்பு: போலீசார் சமரசம் appeared first on Dinakaran.

Related Stories: