குடிசைவாழ் மாணவிகளுக்கும் தன்னம்பிக்கை தரும் புதுமைப் பெண் திட்டம்: முதல்வருக்கு கும்பகோணம் மாணவி பூர்ணா நன்றி

சென்னை: புதுமைப் பெண் திட்டம் மூலம் பயனடைந்த கும்பகோணத்தை சேர்ந்த மாணவி பூர்ணா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் பேரூராட்சி பகுதி ரெங்கநாதபுரம், நடுப்படுகையில் குடிசை பகுதிகள் உள்ளன. இதன் முன்புறத்தில் 100 மீட்டர் தொலைவில் திருமலை ராஜன் ஆறு, மறுபுறம் 400 மீட்டர் தொலைவில் நடாறு. இரண்டு ஆறுகளுக்கும் இடையில் உள்ள படுகையில்தான் இந்தக் குடிசைகள் உள்ளன.

இவற்றில் ஏறத்தாழ 35 குடும்பங்கள் உள்ளன. இங்கிருந்து பட்டீஸ்வரம் ஏறத்தாழ நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள குழந்தைகள் பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நடந்து சென்றுதான் படிக்க வேண்டும். அப்படிச் சென்று படித்து 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்தான் பூர்ணா.
தன் தந்தை பன்னீர்செல்வம், தாய் காமாட்சி, கல்லூரியில் படிக்கும் தம்பி பால சுப்பிரமணியம் ஆகியோருடன் இந்தக் குடிசையில்தான் வாழ்கின்றார். பெற்றோர் இருவரும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள்.

பள்ளிப்படிப்பை முடித்து ஏறத்தாழ 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்.சி கணிதப் பாடத்தைத் தேர்வு செய்து படித்து வருகிறார். பட்டீஸ்வரத்திலிருந்து பேருந்தில் கல்லூரிக்குச் செல்கிறார். இந்தப் பூர்ணாவுக்கு மாதம் ரூ.1,000 வங்கி வழியாக முதல்வரின் புதுமைப் பெண் திட்டத்தால் சென்று சேர்கிறது. இதுகுறித்து பூரணா கூறுகையில், இந்தப் பணம் எனக்குப் பல வழிகளில் பயன்படுகிறது. பேருந்து போக்குவரத்துக்கு, நோட்டுப் புத்தகங்கள் வாங்க பயன்படுகிறது.

என் பெற்றோரின் குடும்பச் செலவுக்கும் பயன்படுகிறது. படிக்கும்போதே சம்பாதிப்பது போன்ற உணர்வு எனக்கு வருகிறது. அதைவிட மனதில் ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது. இந்தத் திட்டத்தை உருவாக்கிய தமிழ்நாடு முதல்வரின் இருப்பிடம் நோக்கி என் கரங்கள் குவித்து நன்றியை செலுத்துகின்றன. என்னைப் போன்ற லட்சக்கணக்கான ஏழை மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கருணைத் தெய்வமாகவே காட்சி அளிக்கிறார்கள். அவரை நீடூழி வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம் என்றார்.

The post குடிசைவாழ் மாணவிகளுக்கும் தன்னம்பிக்கை தரும் புதுமைப் பெண் திட்டம்: முதல்வருக்கு கும்பகோணம் மாணவி பூர்ணா நன்றி appeared first on Dinakaran.

Related Stories: