குமரியில் விடிய விடிய கொட்டிய மழையால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்..அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு..மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய மழையால் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை தொடங்கிய கனமழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. நாகர்கோவில், சுசீந்திரம், கொட்டாரம், தோவாளை, செண்பகராமன் புதூர், திட்டிவிளை சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை கொட்டியது. தக்கலை, திங்கள்சந்தை, குளச்சல் பகுதிகளிலும் இடைவிடாமல் மழை தொடர்ந்ததால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.

இடி, மின்னலுடன் கொட்டிய பலத்த மழையால் காலை நேரத்திலும் இரவு போன்று காட்சியளித்தது. இதனால் வேளைக்கு செல்பவர்கள், விவசாய பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை உருவானது. பாதுகாப்பு கருதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் மழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கீரிப்பாரை பகுதியில் உள்ள அரசு ரப்பர் தோட்ட கழகத்தில் ரப்பர் பால் வெட்டும் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது.

கனமழை காரணமாக சின்னமுட்டம், குளச்சல், தேங்காய்ப்பட்டணம் ஆகிய 3 துறைமுகங்களை சேர்ந்த 900 விசைப்படகுகள், 6,000 நாட்டு படகுகள், 7,000 கட்டுமரங்கள் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் குமரி மாவட்டத்தில் மட்டுமே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல் கடல் சீற்றம் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

The post குமரியில் விடிய விடிய கொட்டிய மழையால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்..அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு..மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை..!! appeared first on Dinakaran.

Related Stories: