கோயம்பேடு மார்க்கெட்டில் கத்தியை காட்டி மிரட்டி டிரைவரிடம் செல்போன் பறிப்பு: 2 பேர் கைது

அண்ணாநகர்: திருச்சியை சேர்ந்தவர் இளையராஜா (25). லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரியில் காய்கறி ஏற்றி வந்தார். கழிவறைக்கு சென்ற அவரை 2 பேர் கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போன் கொடுக்கும்படி இளையராஜாவை மிரட்டினர். அதற்கு அவர், பணம் இல்லை என கூறியுள்ளார். ஆத்திரமடைந்த இருவரும், இளையராஜாவை சரமாரியாக தாக்கி சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை பறித்து மின்னல் வேகத்தில் தப்பினர். காயங்களுடன் இளையராஜா அருகில் உள்ள கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பப்லு (எ) ராஜ்குமார் (22), இவரது கூட்டாளியான அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் (22) என்பதும் இளையராஜாவை தாக்கி செல்போன் பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் இரவு நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் தனியாக நடந்து செல்பவர்களை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. பப்லு (எ) ராஜ்குமார் மீது கோயம்பேடு காவல்நிலையத்தில் வழிப்பறி, செல்போன் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சக்திவேல், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். போதுமான வருமானம் கிடைக்காததால் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களிடம் 2 செல்போன் மற்றும் பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் கத்தியை காட்டி மிரட்டி டிரைவரிடம் செல்போன் பறிப்பு: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: