கேரளாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கிய ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மீட்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கிய ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். முண்டக்காயம் சென்னாப்பாறை ரப்பர் தோட்டத்தில் உள்ள ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை அக்கம்பக்கத்தினர் இரு கரைக்கும் இடையே கயிறு கட்டி மீட்டனர்.

கடந்த 2 தினங்களாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டது. இந்நிலையில் 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், முண்டக்காயம் சென்னாப்பாறை ரப்பர் தோட்டத்தில் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். அவர்கள் பணிபுரியும் ரப்பர் தோட்டத்திற்கிடையே ஒரு ஓடை உள்ளது.

அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓடையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ரப்பர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த வெளியாட்கள் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரை கடக்க முடியாமல் சிக்கினர்.

இதையறிந்த அக்கம்பக்கத்தினர் வந்து இரு கரைக்கும் இடையே கயிறு கட்டி தொழிலாளர்களை மீட்டனர். கனமழை தொடரும்பட்சத்தில் தீயணைப்புத்துறையினர், பேரிடர் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

The post கேரளாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கிய ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: