17 ஆண்டுக்கு முந்தைய கொலை முயற்சி வழக்கு பாஜவுக்கு தாவிய காங்கிரஸ் வேட்பாளர் பற்றி தகவல் தந்தால் ரூ.5,100 ரொக்க பரிசு: காவல்துறை அறிவிப்பு

இந்தூர்: இந்தூரில் கட்சி தாவி, தலைமறைவாக உள்ள அக்ஷய் காந்தி பாம், அவரது தந்தை காந்தி லால் பற்றி தகவல் அளித்தால் ரொக்க பரிசு அளிக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. மத்தியபிரதேசத்தின் இந்தூர் தொகுதிக்கு கடந்த 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் பாஜ வேட்பாளராக தற்போதைய மக்களவை உறுப்பினர் சங்கர் லால்வானி மீண்டும் போட்டியிட்டார். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் அக்ஷய் காந்தி பாம் நிறுத்தப்பட்டிருந்தார். ஆனால் அக்ஷய் காந்தி பாம் கடந்த ஏப்ரல் 29ம் தேதி தன் வேட்பு மனுவை திரும்ப பெற்றார். தொடர்ந்து அவர் பாஜவில் இணைந்தார். இதனால் இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட முடியாத நிலை உருவானது.

இதனிடையே கடந்த 2007ம் ஆண்டு நிலத்தகராறு விவகாரத்தில் யூனுஸ் படேல் என்ற நபரை அக்ஷய் காந்தி பாம் மற்றும் அவரது தந்தை காந்தி லால் ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 24ம் தேதி அக்ஷய் காந்தி பாம், காந்தி லால் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் இருவருக்கும் முன்ஜாமீன் தர அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது. தொடர்ந்து இரண்டு பேரும் மே 10ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இருவரும் ஆஜராகததால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தற்போது இருவரும் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் “கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக உள்ள அக்ஷய் காந்தி பாம் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.5,100 ரொக்கப் பரிசு வழங்கப்படும்” என இந்தூர் காவல்துறையினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

The post 17 ஆண்டுக்கு முந்தைய கொலை முயற்சி வழக்கு பாஜவுக்கு தாவிய காங்கிரஸ் வேட்பாளர் பற்றி தகவல் தந்தால் ரூ.5,100 ரொக்க பரிசு: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: