கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்ட அரசு மருத்துவர்; கையும் களவுமாக கைது செய்தது போலீஸ்..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க லஞ்சம் பெற்ற அரசு மருத்துவரை கையும் களவுமாக போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்த பாலக்காட்டை சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காலில் எலும்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவர் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு மருத்துவர் ஷெரின் ஐசக்கை அணுகியிருக்கிறார். அப்போது சிகிச்சை அளிக்க அவர் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பெண் நோயாளி அதனை கொடுக்க மறுத்த நிலையில், சிகிச்சை அளிக்காமல் மருத்துவர் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இது தொடர்பாக பெண் நோயாளி அளித்த தகவலின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பியுள்ளனர். அதன்படி மருத்துவர் ஷெரின் ஐசக் தனது வீட்டில் வைத்து லஞ்ச பணத்தை வாங்கும் போது கையும் களவுமாக அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது நோயாளிகள் பலரிடம் பெற்ற லஞ்ச பணத்தை சுருட்டி பல இடங்களில் மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான அந்த லஞ்ச பணத்தில் செல்லாத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

The post கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்ட அரசு மருத்துவர்; கையும் களவுமாக கைது செய்தது போலீஸ்..!! appeared first on Dinakaran.

Related Stories: