காஷ்மீர் துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 6 தீவிரவாதிகள் பலியாகினர். 2 வீரர்கள் வீர மரணமடைந்தனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு தீவிரவாத செயல்கள் குறைந்து விட்டதாக மோடி அரசு கூறி வந்தாலும் அங்கு தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. மோடி 3ம் முறையாக பிரதமர் பதவி ஏற்ற ஜூன் 9ம் தேதி ரியாசி மாவட்டத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். ஜூன் 12ம் தேதி ஜம்மு காஷ்மீரின் இருவேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டான். 19ம் தேதி பாரமுல்லா மாவட்டம் வாட்டர்காம் பகுதியில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் தற்போது அமர்நாத் யாத்திரை தொடங்கியுள்ளதால் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குல்கார்ம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மோடர்காம் பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் மீது நேற்று முன்தினம் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதேபோல் பிரிசல் சின்னிகாம் என்ற இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடந்த பயங்கர துப்பாக்கி சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதில் மோடர்காம் பகுதியில் இருந்து 2 தீவிரவாதிகளின் உடல்களும், சின்னிகாம் பகுதியில் இருந்து 4 தீவிரவாதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து பலியான தீவிரவாதிகளின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. மேலும் இரண்டு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

The post காஷ்மீர் துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: