கரூரில் மாரியம்மன் கோயிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலம்: பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திகடன்

கரூர்: கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு வைகாசி திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 11ம் தேதி வரை நடக்கிறது. இந்த திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் கோயில் முன்பு கம்பம் நடப்பட்டு புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்வதும், பிறகு அந்த கம்பத்தினை ஆற்றில் விடும் நிகழ்வும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

அந்தவகையில் இந்த ஆண்டு கடந்த 14ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. அதன் பிறகு தினமும் பக்தர்கள் புனிதநீர், பால் மூலம் கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். பூச்சொரிதல் விழா கடந்த 19ம் தேதி நடைபெற்றது. கடந்த 21ம் தேதியில் இருந்து தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று மாவிளக்கும், பால்குடமும் எடுத்து வரும் விழா நடைபெற்றது. தொடர்ந்து கோயிலில் உள்ள கம்பத்திற்கு பக்தர்கள் பால் அபிஷேகம் செய்தும், மாவிளக்கு பூஜை செய்தும் சாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணியளவில் மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதியுலா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று(29ம் தேதி) காலை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதனையொட்டி மாரியம்மன் தேரில் எழுந்தருளி காலை 7.05 மணியளவில் தேரோட்டம் துவங்கியது. இதில் கரூர், பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை, வெங்கமேடு, காந்திகிராமம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி திரளான பக்தர்கள் தீச்சட்டி, அலகு குத்துதல், காவடி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்து நேர்த்திகடன் செலுத்தினர். நாளை மற்றும் நாளை மறுதினங்களில் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 31ம் தேதி (புதன்கிழமை) விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா நடக்கிறது.

The post கரூரில் மாரியம்மன் கோயிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலம்: பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திகடன் appeared first on Dinakaran.

Related Stories: