கன்னியாகுமரியில் கஞ்சா போதையில்மீனவர் உள்பட 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

*2 பேர் கைது – மருத்துவமனையில் ரகளை

கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் கஞ்சா போதையில் 3 பேரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கன்னியாகுமரி சுனாமி காலனி பகுதியை சேர்ந்தவர் ஆக்னல் (24). இவருக்கும், கன்னியாகுமரி முருகன்குன்றம் பகுதியை சேர்ந்த ஜெப்ரீன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் ஜெப்ரீன் மன்றம் அவரது நண்பர் ஒருவர் சேர்ந்து ஆக்னலை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதில் ஆக்னலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக, கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆக்னலை வெட்டியவர்கள் நேராக கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்புக்கு சென்றனர். அங்கு வங்கி ஏடிஎம் மூலம் பணம் அனுப்பி விட்டு வந்த கன்னியாகுமரி ஹைகிரவுன்ட் பகுதியை சேர்ந்த மீனவர் மோகன்தாஸ் என்பவரையும் காரணமின்றி அரிவாளால் வெட்டினர். பின்னர் கன்னியாகுமரி லூர்து மாதா தெருவுக்கு சென்ற கும்பல், அங்கிருந்த டைசன் என்பவரையும் அரிவாளால் வெட்டினர். இது குறித்து அறிந்ததும் கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் விரைந்தனர்.

காயம் அடைந்த 3 பேரும் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து டி.எஸ்.பி. மகேஷ்குமார் விசாரணை நடத்தினார். பின்னர் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு கும்பலை தேடினர்.இந்த நிலையில் நேற்று அதிகாலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆக்னலை மீண்டும் தாக்க வந்த ஜெப்ரீனை போலீசார் சுற்றி வளைத்தனர்.

அப்போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்று கீழே விழுந்ததில் அவர் காயம் அடைந்தார். அவரையும் சிகிக்சைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது தான் ெஜப்ரீன் கஞ்சா போதையில் இருந்தது தெரிய வந்தது. கஞ்சா போதையில் கடும் ரகளையில் ஈடுபட்டார். அவரை போலீசார் கட்டுப்படுத்தினர்.

பின்னர் நடந்த விசாரணையின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக ஜெப்ரீன், அவரது நண்பர் கான்ஸ்டீன் ராபின் என்ற லக்ஸ் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இருவரையும் நேற்று கைது செய்தனர். மேலும் யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. கஞ்சா போதையில் அடுத்தடுத்து 3 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசுக்கு மிரட்டல்

கஞ்சா போதையில் இருந்த ஜெப்ரீன் போலீசார் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் யார் தெரியுமா? உங்களை (போலீசாரை) சும்மா விட மாட்டேன். நீயா, நானா என பார்த்து விடுவோம் என கூறி கடும் ரகளையில் ஈடுபட்டார். இதனால் போலீசார் ஜெப்ரீனை கட்டுப்படுத்த கடும் சிரமம் அடைந்தனர். பின்னர் சிகிச்சை முடிந்து கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். கன்னியாகுமரியில் தற்போது மீண்டும் கஞ்சா கும்பலின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கஞ்சா போதை கும்பலின் அட்டூழியத்தால் அச்சமடைந்துள்ள அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கன்னியாகுமரியில் கஞ்சா போதையில்மீனவர் உள்பட 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Related Stories: