சட்டவிரோத நிலபேர விவகாரம் ஜார்கண்ட் ஐஏஎஸ் அதிகாரி கைது: அமலாக்கத்துறை அதிரடி

ராஞ்சி: சட்டவிரோத நில பேரங்களில் ஈடுபட்ட ஜார்கண்ட் ஐஏஎஸ் அதிகாரி சாவி ரஞ்சனை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். ஜார்க்கண்ட் மாநில ஐஏஎஸ் அதிகாரியான சாவி ரஞ்சன், ராஞ்சி மாவட்ட துணை கமிஷனராக இருந்த போது பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலங்களை தனிநபர்களுக்கு விற்கப்பட்ட விவகாரத்தில் சிக்கினார். இது சம்மந்தமான வழக்கில் சாவி ரஞ்சனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி பல இடங்களில் சோதனையும் நடந்தது. இந்நிலையில் சாவி ரஞ்சனை அமலாக்க துறை நேற்று கைது செய்தது. தற்போது அவர் அமலாக்கத்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ஜார்கண்ட் மாநில சமூக நலத்துறையின் இயக்குநராகப் பணிபுரியும் சாவி ரஞ்சன் நேற்று விசாரணைக்காக ஆஜரானார். கிட்டத்தட்ட 10 மணி நேர விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு பணமோசடி வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்கால் என்பவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது இரண்டாவது ஐஏஎஸ் அதிகாரி சாவி ரஞ்சன் என்பவரும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது வழக்கறிஞர் அபிஷேக் கிருஷ்ண குப்தா கூறுகையில், ‘சாவி ரஞ்சன் கைது செய்யப்பட்டதற்கான எந்தத் தகவலும் என்னிடம் இல்லை’ என்றார்.

The post சட்டவிரோத நிலபேர விவகாரம் ஜார்கண்ட் ஐஏஎஸ் அதிகாரி கைது: அமலாக்கத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: