ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் அவிழ்க்கும் போது உரிமையாளர்கள் பெயரோடு சாதி பெயரை குறிப்பிடக்கூடாது : ஐகோர்ட் கிளை உத்தரவு!!

மதுரை : ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் அவிழ்க்கும் போது உரிமையாளர்கள் பெயரோடு சாதி பெயரை குறிப்பிடக்கூடாது.என்ற உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் நாளான 15-ம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 16ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு, 17ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனுவில்,”ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் அவிழ்க்கும் போது உரிமையாளர்கள் பெயரோடு சாதி பெயரை குறிப்பிட்டு அறிவிக்கக் கூடாது என்று 2019ம் ஆண்டில் விசாரிக்கப்பட்ட வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. ஆனால் கடந்த காலங்களில் இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை. ஜல்லிக்கட்டு போட்டியில் அரசு அதிகாரிகள் முன்பாகவே உரிமையாளர்கள் பெயரோடு சாதி பெயரை குறிப்பிட்டு வருகின்றனர். இது நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது. ஆகவே இந்த நடைமுறை இந்த ஆண்டும் தொடர கூடாது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி கட்டாயம் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும், “என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் அவிழ்க்கும் போது உரிமையாளர்கள் பெயரோடு சாதி பெயரை குறிப்பிடக்கூடாது.என்ற உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன் தீண்டாமை உறுதிமொழி எடுப்பது குறித்த மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து தமிழக அரசு உரிய முடிவெடுக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தனர். இதையடுத்து ஜல்லிக்கட்டு வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு முறையாக பின்பற்றப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

The post ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் அவிழ்க்கும் போது உரிமையாளர்கள் பெயரோடு சாதி பெயரை குறிப்பிடக்கூடாது : ஐகோர்ட் கிளை உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: