இஸ்ரேல் – ஹமாஸ் போர் எதிரொலி: காசாவில் உணவு, குடிநீர் இல்லாமல் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை.. ஐ.நா.கவலை..!!

எருசலேம்: காசாவில் உணவு, குடிநீர் இல்லாமல் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை ஏற்படும் என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் கடந்த 7ம் தேதி தொடங்கிய நிலையில், இந்த மோதலில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேரும், காஸாவில் 1,100 பேரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் உள்ள கட்டடங்கள் பெரும்பாலும் இடிந்து நாசமாகியுள்ளது. அங்கிருந்து லட்சக்கணக்கானோர் வேறு இடத்தில் தஞ்சமடைந்தனர். இந்தத் தாக்குதல் காரணமாக காசாவுக்கு மின்சாரம், தண்ணீர், எரிபொருள் ஆகியவற்றின் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. இதனால், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் அடிப்படைத் தேவைகள் இன்றி கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளார்கள். இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு ஹமாஸ் ஆதரவாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காசாவில் உணவு, குடிநீர் இல்லாமல் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.நா.எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்து 24 மணி நேரத்தில் வடக்கு காசாவில் இருந்து 11 லட்சம் மக்கள் வெளியேறாவிட்டால் நிலைமை மோசமாகும் என ஐ.நா. தெரிவித்துள்ளது. காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்றால் தெற்கு பகுதியில் உள்ள ராஃபா நகரத்தில் இருந்து எகிப்து எல்லையை அடைய வேண்டும். நேற்றிலிருந்து காசாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வடக்கு பகுதியில் இருக்கும் 11 லட்சம் மக்கள் செய்வதறியாது அங்கேயே உள்ளார்கள். எனவே அடுத்த 24 மணி நேரத்திற்குள் அப்பாவி மக்களை வெளியேற்றாவிட்டால் உயிரிழப்பு அதிகரிப்பதோடு, உணவு, குடிநீர் இன்றி இறப்பவர்கள் எண்ணிக்கை, பட்டினியால் இறப்பவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

The post இஸ்ரேல் – ஹமாஸ் போர் எதிரொலி: காசாவில் உணவு, குடிநீர் இல்லாமல் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை.. ஐ.நா.கவலை..!! appeared first on Dinakaran.

Related Stories: