பேரன்டிங் என்பதெல்லாம் சாதாரண விஷயமா..?

நன்றி குங்குமம் தோழி

நான் ஒரு நல்ல பேரன்ட் தெரியுமா? என்றார் ஒரு பெண்மணி. காரணம், அவர் தன் குழந்தையை ரொம்ப கவனமா வளர்க்கிறார். அவங்க யார்கிட்ட பேசுறாங்க பழகுறாங்க என கவனமா பார்த்துக் கொள்கிறார். தவறான ஃப்ரண்ட்ஷிப்பை அப்படியே ஒதுக்க சொல்லிவிடுகிறார். அப்படியென்றால் என்ன அர்த்தம். நம் குழந்தைகள் யாரோட பழகணும், யாரோட பழகக் கூடாது என முடிவு செய்யும் இடத்தில் நாம இருக்கிறோம் என்பதுதானே அர்த்தம். அது சரியான பேரன்டிங் முறையா? என கேட்டால் இல்லை எனலாம்.

‘‘அம்மா அந்த ராகேஷ் ரொம்ப பேட் பாய் தெரியுமா?” என எல்.கே.ஜி.யிலேயே ஒரு குழந்தை சரியாக கணித்து சொல்லும். ஆமா ஏன் அந்த ராகேஷ் பேட் பாய்? என கேட்டால்.. அவன் ‘‘ஆத்மிகாவோட சாக்லெட்டை அவளுக்கு தெரியாம எடுத்து சாப்பிட்டான்”, ‘‘மிஸ் சொல்வதை கேட்க மாட்டான்’’ என பட்டென சொல்லும். உடனே நாம் ‘‘இனிமே நீ அவன் கூட சேராத” என குழந்தைக்கு தடை போடுவோம். நம் குழந்தையை பத்திரமாக பாதுகாப்பதாக நினைத்து. உண்மையில் வாழ்க்கை முழுவதுமாக நம் குழந்தைகளை அல்லவைகளிலிருந்து காப்பாற்றிக் கொண்டேயிருப்போமா என்ன? அவர்களே தானே அவர்களை தற்காத்துக்கொள்ள முடியும்.

இவ்வளவு ஏன் குழந்தையே திருடி சாப்பிடுவது தவறென்று புரிந்து தானே சொல்கிறது. அவனோடு பேசணுமா? கூடாதா? என குழந்தையே முடிவுக்கு வருமே. அதற்கு நாமும் ஒரு சந்தர்ப்பம் தரலாமே. மாறாக சிறுவயதிலேயே நமது கருத்து திணிப்பை ஆரம்பித்துவிட வேண்டுமா? அது வளர வளர அவர்களை ஒரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பும்.

நாம் கட்டுப்பாடுகள் விதிக்க துவங்கினால் நாளடைவில் தனது நண்பர்கள் குறித்த தகவல்களை அவர்கள் நம்மிடம் மறைக்க ஆரம்பிப்பார்கள். தன் சக தோழர்/ தோழியர்களின் நடவடிக்கைகள் சரியா? தவறா? என குழம்பும் பருவத்தில் நம்மிடம் ஆலோசனைக்காக வரவே மாட்டார்கள். இவங்க கிட்ட சொன்னா அவங்களோட நீ ஏன் பழகற ? என நம்மை நோக்கி விரல் நீட்டி குற்றம் சுமத்துவார்கள் என தயங்குவார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளை தோழமையுடன் அணுகினால் மட்டுமே அவர்கள் பல விஷயங்களை பகிரத் தொடங்குவார்கள். அவை அனைத்திற்கும் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை நம் கருத்து தேவைப்படும் இடங்களில் அவர்களே நீங்க என்னப்பா நினைக்கறீங்க? இது சரியா நீங்க சொல்லுங்கம்மா? என நம் முகம் நோக்குவார்கள். அப்போது கூட நம் கருத்துக்களை அழுத்தமாக திணிக்காமல் இறுதி தீர்ப்பாக சொல்லாமல், இப்படி செய்திருக்கலாம் என சஜஷனாக சொல்ல முயலலாம். அது குறித்து அவர்களே யோசித்து ஒரு நல்ல முடிவுக்கு வருவார்கள்.

இப்படி தோழமையுடன் பழகும் பெற்றோர்களிடம் மட்டுமே அவர்கள் காதல்கள், தோல்விகள், எதிர்கால லட்சியங்கள் குறித்து தைரியமாக கலந்து ஆலோசிப்பார்கள்.
குழந்தைகளின் வாழ்க்கை முழுவதும் நாம் அவர்களோடு துணைக்கு போகவே முடியாது. ஆனால் போகிற போக்கில் நாம் தோழமையுடன் சொல்லும் ஆலோசனைகள் மட்டும் வாழ்க்கை முழுவதும் அவர்கள் கூடவே வரும். அதற்கு அவர்களின் முழுநம்பிக்கையை பெற்றோர்கள் பெற வேண்டும். அதற்கு பெற்றவர்கள் ஒரு பார்வையாளராக, ஆலோசகராக மட்டுமே இருக்க வேண்டும்.

– தனுஜா ஜெயராமன், சென்னை.

The post பேரன்டிங் என்பதெல்லாம் சாதாரண விஷயமா..? appeared first on Dinakaran.

Related Stories: