சிவகாசியில் இந்த புத்தாண்டு ஸ்பெஷலாக அறிமுகம் இரவிலும் ஜொலிக்கும் எல்இடி காலண்டர்: விலை ரூ.1,200 5 ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம்

சிவகாசி: இந்த புத்தாண்டு ஸ்பெஷலாக, இரவில் ஜொலிக்கும் எல்இடி காலண்டர்கள் சிவகாசியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு பிறக்க இன்னும் 20 நாட்களே உள்ளன. 2024ம் ஆண்டை வரவேற்பதற்கும் நம்முடைய இல்லங்களை அலங்கரிப்பதற்கும் புதிய காலண்டர்கள் தயாரிக்கும் பணி விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஜரூராக நடைபெறுகிறது. மொத்தமாக காலண்டர்களை வாங்க வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் சிவகாசிக்கு படையெடுப்பதால் அச்சக உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகாசியில் இருக்கும் அச்சகங்களில் இரவு பகலாக காலண்டர்கள் அச்சாகி வருகின்றன. ஒவ்வொரு வருடமும் பல புதுவித மாடல்களில் காலண்டர்களை தயாரித்து பட்டாசிற்கு அடுத்து அச்சுத் தொழிலும் இந்தியாவின் கவனத்தை சிவகாசி கவர்ந்துள்ளது. பல்வேறு வகையான தினசரி காலண்டர்கள், டேபிள் காலண்டர்கள், பிவிசி காலண்டர்கள், ஆர்ட் பேப்பர் டெய்லி காலண்டர்கள், பேன்ஸி டை கட்டிங் காலண்டர்கள் என பல்வேறு வகையான காலண்டர்கள் தயாரிக்கப்பட்டு விற்பனையில் உள்ளது.

இந்த ஆண்டு புது வரவாக இரவில் ஜொலிக்கும் எல்இடி காலண்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த காலண்டர்களே தற்போது டிரெண்டிங்கில் உள்ளன. இந்த மாடல் காலண்டர்கள், விஐபி காலண்டர் என்று அழைக்கப்படுகின்றன. இரவில் எல்இடி வெளிச்சத்தில் ஒளிரும் வகையிலும் பகலில் விஐபி காலண்டர் போன்றும் காட்சியளிக்கின்றது. இந்த காலண்டர்கள் ரூ.1,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிங்கிள் காலண்டராகவும் மொத்தமாகவும் ஆர்டர்கள் பெற்று அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது இந்த காலண்டர்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. காலண்டர் உற்பத்தியாளர் அமோஸிஸ் அமீன் சாகுல் கூறும்போது, ‘‘அழகிய சாமி படங்கள், ஏசு பிரான் மற்றும் முஸ்லீம் மார்க்க காலண்டர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் காலண்டர்கள் என 30 வகையான டிசைன்களில் கண்கவரும் வண்ணத்தில் இந்த காலண்டர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விஐபி காலண்டர்கள் சாதாரண காலண்டர்களை விட விலை அதிகமாக இருப்பினும் 5 வருடங்களுக்கு பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த காலண்டர்கள் பெரும்பாலும் பூஜை அறைகளில் அலுவலக வரவேற்பு அறைகளில் வைக்கப்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் இந்த காலண்டர்களில் கீழே உள்ள கேக்கை மட்டும் புதிதாக மாற்றி 5 வருடத்திற்கு தொடர்ந்து பயன்படுத்த முடியும்’’ என்றார்.

The post சிவகாசியில் இந்த புத்தாண்டு ஸ்பெஷலாக அறிமுகம் இரவிலும் ஜொலிக்கும் எல்இடி காலண்டர்: விலை ரூ.1,200 5 ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் appeared first on Dinakaran.

Related Stories: