பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், நாம் நடத்த இருக்கின்ற மாபெரும் உலக முதலீட்டாளர் மாநாட்டின் பிரமாண்டத்தை முன்கூட்டியே வெளிப்படுத்தக் கூடிய நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 2024 ஜனவரி மாதம் 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்தப்படவுள்ளது என்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய தினம் சென்னையைச் சுற்றி காஞ்சி புரத்துக்கோ – சோழிங்கநல்லூருக்கோ – திருபெரும்புதூருக்கோ – ஒரகடத்துக்கோ நீங்கள் சென்றால், பார்க்கக் கூடிய பல தொழிற்சாலைகள், கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்டவைதான். அப்போது, தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை அடைந்தது.
கடந்த 2 ஆண்டுகளில், 241 முதலீட்டுக் கருத்துருக்கள் மூலம் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 196 கோடி முதலீட்டை ஈர்த்திருக்கிறோம். 4 லட்சத்து 15 ஆயிரத்து 282 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப் பட்டிருக்கிறது. வளர்ச்சி மிகுந்த தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாருங்கள். உங்களைத் தமிழ்நாடு வருக! வருக! என வரவேற்கிறது. முதலீட்டின் மூலமாக தமிழ்நாடும் வளரும். உங்களது நிறுவனமும் வளரும். இந்திய அளவில், தொழில் புரிவதற்கான மிகச் சிறந்த சூழலமைப்பு கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. தொழில் நிறுவனங்களுக்கான நிலங்கள் கையிருப்பு அடிப்படையில், தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஜனவரி 7, 8 தேதிகளில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உங்களையெல்லாம் சந்திப்போம்.
* ரூ.515 கோடி முதலீடுக்கு ஒப்பந்தம்
கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் ரூ.515 கோடி முதலீடு மற்றும் 446 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய உற்பத்தி ஆலை நிறுவ முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.515 கோடி முதலீட்டில் 446 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு மற்றும் கோத்ரேஜ் குழுமத்திற்கும் இடையே நேற்று கையெழுத்தானது.
இந்நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில், 515 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 446 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சோப்புகள், முகஅழகு க்ரீம்கள், தலைமுடி பராமரிப்பு சாதனங்கள் மற்றும் கொசு ஒழிப்பான் போன்றவற்றிற்கு ஒரு உற்பத்தி மையத்தை நிறுவ உள்ளது. இந்த திட்டத்தில், 50 சதவிகிதம் அளவிற்கு பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது புத்தாக்கம் மற்றும் நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் நிறுவப்பட உள்ளதாக கோத்ரேஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
The post இந்திய அளவில் தொழில் புரிவதற்கான மிகச்சிறந்த சூழலமைப்பு கொண்ட மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.