சந்திராயன்-3 வெற்றியடைய திருப்பதி கோயிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம்.: விண்கலத்தின் மாதிரியை வைத்து வழிபாடு!!

ஹைதராபாத் : நாளை சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதை முன்னிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி கோயிலில் தரிசனம் செய்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலனை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்வுடன் இணைத்துள்ளது. தற்போது ஜிஎல்எல்வி மார்க்-3 எல்எம்வி3 என அழைக்கப்படுகிறது. சந்திரயான் 3 விண்கலத்தை எல்எம்வி3 ராக்கெட்டில் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக பொருத்தினர். விண்கலத்துக்கும் ராக்கெட்டுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டது. மேலும் சந்திரயான்3 விண்கலத்தை ஏவுவதற்கான திட்ட ஒத்திகை நிகழ்வும் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து நாளை மதியம் 2.35 மணிக்கு ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் எல்எம்வி 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான கவுன்ட்டவுன் இன்று மதியம் ஒரு மணிக்கு தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான் 2 விண்கலத்தை அனுப்பி தோல்வியடைந்த பின்னர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மீண்டும் இந்தியா அனுப்பும் சந்திரயான் 3 விண்கலத்தை உலகமே உற்று நோக்கி வருகிறது.

இந்த நிலையில், சந்திராயன்-3 விண்கலம் வெற்றியடைய வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் சந்திரயான்-3-ன் சிறிய மாதிரியை சாமி சன்னதியில் வைத்து பிரார்த்தனை செய்தனர். வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

The post சந்திராயன்-3 வெற்றியடைய திருப்பதி கோயிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம்.: விண்கலத்தின் மாதிரியை வைத்து வழிபாடு!! appeared first on Dinakaran.

Related Stories: