பாகிஸ்தான் தேர்தலில் 18,000 வேட்பாளர்கள் போட்டி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொது தேர்தலில் போட்டியிடும் 18 ஆயிரம் வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் பிப்ரவரி 8ம் தேதி பொது தேர்தல் நடக்கிறது. முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானுக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான் கானின் கட்சி சின்னமான கிரிக்கெட் மட்டையை அவரது கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. அவரது கட்சியை சேர்ந்த பல தலைவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இம்ரான் கட்சி வேட்பாளர்கள் சுயேச்சை சின்னங்களில் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படாவிட்டால் பாகிஸ்தானில் அரசியல் நிச்சயமற்றத்தன்மை ஏற்படும் என இம்ரான் கான் சமீபத்தில் எச்சரித்திருந்தார்.பொது தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு 7 உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டியை இடைக்கால பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் அமைத்துள்ளார். இந்நிலையில் அடுத்த மாதம் நடக்கும் தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதி பெயர்களை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நேற்றுமுன்தினம் வெளியிட்டது.18 ஆயிரம் பெயர்கள் அடங்கிய வேட்பாளர்களில் இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியின் பல முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இல்லை.

முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(என்) பிரவு தலைவர் நவாஸ் ஷெரீப் மன்சேரா, லாகூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவரது தம்பியும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் காசூர், லாகூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மகனான பிலாவல் பூட்டோ 3 தொகுதிகளில் போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பாகிஸ்தான் தேர்தலில் 18,000 வேட்பாளர்கள் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: