டிச.2ம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்பு.. தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்: தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் இன்று கனமழை பெய்யக்கூடும். இலங்கை அருகே கீழடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. நாளை, நாளை மறுநாள் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று பாலச்சந்திரன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வாராய் இயல்பை விட 8% குறைவாக பெய்துள்ளது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 2, 3 தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிச.2-ம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்பு:
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிச.2-ம் தேதி வாக்கில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என்று தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆழ்கடல் சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தல்:
ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் இன்றைக்குள் கரை திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி நகருமா என்று தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

The post டிச.2ம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்பு.. தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்: தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: