தமிழக சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகள் எத்தனை?: விவரம் தாக்கல் செய்ய ஏப்ரல் வரை அவகாசம்

சென்னை: தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விசாரணையை கண்காணிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின்போது தமிழகம் முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களையும், அந்த வழக்குகளின் விசாரணை நிலை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் நிசார் அஹமது, சில மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆஜராகியுள்ளதால் நீதிமன்றத்துக்கு உதவியாக செயல்பட இயலாது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, அவருக்கு பதிலாக, மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவனை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகளின் விவரங்களை சேகரித்துள்ளோம். இந்திய தண்டனை சட்ட பிரிவு உள்ளிட்ட மற்ற பிரிவு வழக்குகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதனால் வழக்குகளின் விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post தமிழக சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகள் எத்தனை?: விவரம் தாக்கல் செய்ய ஏப்ரல் வரை அவகாசம் appeared first on Dinakaran.

Related Stories: