இந்து முன்னணி கூட்டத்தில் பேசிய பாஜ நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

பெரம்பூர்: இந்து முன்னணி கூட்டத்தில் பேசிய பாஜ நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி பி.வி.காலனி 29வது தெருவைச் சேர்ந்தவர் இந்து பிரியன் (33). இவர் பாரதிய ஜனதா கட்சியில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி இளைஞர் அணி தெற்கு மண்டல தலைவராக உள்ளார். கடந்த 16ம் தேதி 44வது வட்டத்தில் இந்து முன்னணி சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. அதில் இந்து பிரியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேடையில் பேசினார். அப்போது குறிப்பிட்ட ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து வாட்ஸ்அப் மூலம் இந்து பிரியனை தொடர்பு கொண்ட நபர், இனி மேடை ஏறி பேசினால் உன்னை கொன்று விடுவோம், என மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து இந்து பிரியன் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த ராமச்சந்திரன் (எ) மணிகண்டன் (31) என்பவர், இந்து பிரியனுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது இந்து பிரியனுக்கும், தனக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்து வந்ததாகவும், இதனால், அவரை மிரட்டியதும் தெரியவந்தது. இதனையடுத்து ராமச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post இந்து முன்னணி கூட்டத்தில் பேசிய பாஜ நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: