மேற்படிப்பு சீட் வாங்கித் தருவதாக பெண் டாக்டரிடம் ரூ.20 லட்சம் மோசடி; பேராசிரியை கைது: மற்றொரு டாக்டர் – தந்தைக்கு வலை

நாகர்கோவில்: பெண் டாக்டருக்கு மருத்துவ மேற்படிப்பு சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரில் முன்னாள் பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு டாக்டர், அவரது தந்தையை போலீசார் தேடி வருகிறார்கள். நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த கென்னடி (60). தொழிலதிபர். கம்பி மற்றும் கட்டுமான பொருள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் டாக்டர் சுகிமா. எம்.பி.பி.எஸ். முடித்து விட்டு நாகர்கோவிலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றுகிறார். மருத்துவ மேற்படிப்புக்கு முயற்சி செய்து வந்தார்.

அப்போது நாகர்கோவில் தம்மத்துக்கோணம் பகுதியை சேர்ந்த சிதம்பரத்தில் ஒரு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியையான ஜான்சி (50) என்பவர் ஆனந்த கென்னடியை தொடர்பு கொண்டு பாண்டிச்சேரி இன்ஸ்டிடியூட் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் மருத்துவ முதுகலை படிப்புக்கான சீட் வாங்கி தருவதாகவும், இதற்கு 23 லட்ச ரூபாய் செலவாகும் என்றும் கூறினார். பின்னர் ஜான்சி கூறியபடி கடலூர் பகுதியை சேர்ந்த டாக்டர் ஜானகிராமன், அவரது தந்தை அண்ணாமலை ஆகியோரிடம் 23 லட்சம் ரூபாயை ஆனந்த கென்னடி கொடுத்துள்ளார். அதன்படி கல்லூரியில் சேருவதற்கான உத்தரவு நகலை இவர்கள் வழங்கினர். ஆனால் அந்த கல்வி நிறுவனத்திற்கு சென்ற போது அது போலி என்பது தெரிய வந்தது.

இது குறித்து கேட்டதற்கு ஜான்சி அடுத்த முறை கண்டிப்பாக வாங்கி தந்து விடுகிறோம் என்று கூறியுள்ளார். பணத்தை திரும்ப கேட்டபோது ரூ.3 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு மீதியை கொடுக்காமல் ஏமாற்றினர். இது குறித்து ஆனந்த கென்னடி குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதையடுத்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி ஆனந்த கென்னடி அளித்த புகாரின் பேரில் ஜான்சி, டாக்டர் ஜானகிராமன், அவரது தந்தை அண்ணாமலை ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஜான்சியை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தக்கலை பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ஜானகிராமன் மற்றும் அவரது தந்தை அண்ணாமலை ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

The post மேற்படிப்பு சீட் வாங்கித் தருவதாக பெண் டாக்டரிடம் ரூ.20 லட்சம் மோசடி; பேராசிரியை கைது: மற்றொரு டாக்டர் – தந்தைக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: