குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த தகவல் தரும் யூ-வின் செயலி பயன்பாட்டை விரிவுபடுத்த சுகாதாரத்துறை முடிவு

சென்னை: டிஜிட்டல் முறையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி சான்றிதழ்கள் வழங்கும் ‘யூ-வின்’ (U-Win) செயலியின் பயன்பாட்டை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் உள்பட நோய்கள் வராமல் தடுக்க மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் போடப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு பல்வேறு நிலைகளில் உள்ள மருத்துவமனை மூலம் 9.4 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

குழந்தைகளுக்கு தடுப்பூசி எந்த தேதியில், என்ன ஊசி போட வேண்டும் என்பது கடந்த காலங்களில் புத்தகம் அல்லது அட்டைகளில் எழுதி தரப்பட்டது. இந்நிலையில், ஒன்றிய அரசின் ‘யூ-வின்’ செயலி மூலமாக தடுப்பூசி சான்றிதழை டிஜிட்டல் முறையில் வழங்கும் திட்டம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ‘யூ-வின்’ செயலி மூலம் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். அதேபோல, அந்த செயலியில் இருந்து கைபேசி எண்ணுக்கு தடுப்பூசி தவணையை நினைவூட்டி குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதன்மூலம் சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தமிழகத்தில் சோதனை முயற்சியாக திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இதை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது: திண்டுக்கல் மற்றும் ஈரோட்டில் இந்த செயலி அறிமுகப்படுத்திய பிறகு தடுப்பூசி செலுத்துவது எளிதாக உள்ளதாக தெரிவித்தனர். அதுமட்டுமின்றி அவர்களின் மொபைல் போன்களில் இருந்தே மருத்துவ அறிக்கைகளை தயாரிக்க முடியும். ஜூலை 31ம் தேதிக்கு முன்னர் ‘யூ-வின்’ செயலியை மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டது. இது குறித்து மாநில அதிகாரிகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் பயிற்சி வழங்க உள்ளது.

The post குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த தகவல் தரும் யூ-வின் செயலி பயன்பாட்டை விரிவுபடுத்த சுகாதாரத்துறை முடிவு appeared first on Dinakaran.

Related Stories: