லக்னோ சூப்பர் ஜயன்ட்சை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்: பந்துவீச்சில் மோகித் அசத்தல், டி காக் போராட்டம் வீண்

அகமதாபாத்: லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 56 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற லக்னோ கேப்டன் க்ருணால் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார். விரித்திமான் சாஹா, ஷுப்மன் கில் இணைந்து குஜராத் இன்னிங்சை தொடங்கினர். லக்னோ பந்துவீச்சை பதம் பார்த்த இருவரும் அதிரடியாக அரை சதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி 12 ஓவரில் 142 ரன் சேர்த்து அமர்க்களமான தொடக்கத்தை கொடுத்தது. சாஹா 81 ரன் (43 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆவேஷ் கான் பந்துவீச்சில் மன்கட் வசம் பிடிபட்டார்.

அடுத்து கில் – கேப்டன் ஹர்திக் பாண்டியா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்தது. ஹர்திக் 25 ரன் (15 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி மோஷின் கான் பந்துவீச்சில் க்ருணால் வசம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் கில் – மில்லர் ஜோடி பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட, குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன் குவித்தது. கில் 94 ரன் (51 பந்து, 2 பவுண்டரி, 7 சிக்சர்), மில்லர் 21 ரன்னுடன் (12 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 228 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் களமிறங்கியது.

கைல் மேயர்ஸ் – டி கான் இணைந்து துரத்தலை தொடங்கினர். அதிரடியாக அடித்து விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.1 ஓவரில் 88 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. மேயர்ஸ் 48 ரன் (32 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி மோகித் ஷர்மா பந்துவீச்சில் ரஷித் கான் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த தீபக் ஹூடா 11 ரன், ஸ்டாய்னிஸ் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். உறுதியுடன் போராடிய டி காக் 70 ரன் (41 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ரஷித் கான் சுழலில் கிளீன் போல்டானார். அதன் பிறகு வந்த வீரர்களில் ஓரளவு தாக்குப்பிடித்த ஆயுஷ் பதோனி 21 ரன் (11 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாச, மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.

கேப்டன் க்ருணால் பாண்டியா கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன் மட்டுமே எடுத்து, 56 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஸ்வப்னில் 2 ரன், பிஷ்னோய் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் மோகித் ஷர்மா 4 ஓவரில் 29 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஷுப்மன் கில் ஆட்ட நாயகன் விருது பெற்றார். குஜராத் அணி 11 போட்டியில் 8வது வெற்றியை பதிவு செய்து 16 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

The post லக்னோ சூப்பர் ஜயன்ட்சை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்: பந்துவீச்சில் மோகித் அசத்தல், டி காக் போராட்டம் வீண் appeared first on Dinakaran.

Related Stories: