செங்கல்பட்டு அருகே நிலத்தில் காய்ந்த கோரை புற்கள் தீப்பிடித்தது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நேற்றிரவு பயன்பாட்டில் இல்லாத விவசாய நிலத்தில் மண்டி கிடந்த கோரைப் புற்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக பெய்த மழையினால் அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகே பொன்விளைந்த களத்தூர் செல்லும் சாலையில் உள்ள சக்கரவர்த்தி நகருக்குப் பின்புறம் உள்ள சுமார் 10 ஏக்கர் விவசாய நிலம் எவ்வித பயன்பாடும் இன்றி, தற்போது காய்ந்த கோரை புற்களுடன் முட்புதர் காடுகளாக கிடந்தது. இதனால் இங்கு இரவு நேரங்களில் வழிப்பறி கொள்ளை, கஞ்சா விற்பனை மற்றும் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்கள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், சக்ரவர்த்தி நகரின் பின்புறத்தில் காய்ந்த கோரை புற்களுடன் கிடந்த விவசாய நிலத்தில் நேற்றிரவு 8 மணியளவில் திடீரென கரும்புகை எழுந்தது. சிறிது நேரத்தில் காற்றின் வேகத்தில் அங்கிருந்த கோரைப் புற்கள் மற்றும் முட்புதர் காடு திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. இதனால் சக்ரவர்த்தி நகரில் வசிக்கும் மக்கள் வாளிகளில் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதுகுறித்து செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தும், சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கோரை புற்கள் எரிந்த நிலையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வரவில்லை. இதனால் ஒரு ஏக்கருக்கும் மேலாக தீ பரவி நிலையில், அருகில் சக்ரவர்த்தி நகரின் உள்ள வீடுகளுக்கும் பரவும் அபாயநிலை ஏற்பட்டது.

அதே சமயத்தில், செங்கல்பட்டு பகுதிகளில் திடீரென அரைமணி நேரம் கனமழை பெய்தது. இதனால் விவசாய நிலைத்தில் எரிந்து கோரை புற்களில் பரவிய தீ முற்றிலும் அணைந்தது. இந்த விவசாய நிலத்தில் மதுபோதையில் யாரேனும் சிகரெட் பிடித்துவிட்டு அணைக்காமல் போட்டிருக்கலாம் அல்லது இந்த கோரை புற்களுக்கு யாரேனும் மர்ம நபர் தீ வைத்திருக்கலாம். இப்பகுதிகளில் போலீசார் தொடர் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். இதுபோன்ற தீ விபத்து ஏற்படும் சமயங்களில் தீயணைப்பு படையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக்ரவர்த்தி நகர் பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post செங்கல்பட்டு அருகே நிலத்தில் காய்ந்த கோரை புற்கள் தீப்பிடித்தது appeared first on Dinakaran.

Related Stories: