4வது மாநிலமாக கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றியதால் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் உற்சாகம்: 2024 மக்களவை தேர்தலுக்கான அரசியல் வியூகம் மாறுகிறது

புதுடெல்லி: 4வது மாநிலமாக கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ், இந்தாண்டு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் தேர்தல் மற்றும் 2024 மக்களவை தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து வருகிறது. கர்நாடகா மாநில சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றியை பெற்றதின் மூலம், அக்கட்சி தேசிய அளவில் 4 மாநிலங்களில் ஆட்சியை நடத்தும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த பேரவை ேதர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிப் பெற்றது. தற்போது கர்நாடகாவிலும் அமோக வெற்றி பெற்றுள்ளதால், அதன் வெற்றிக் கணக்கு எண்ணிக்கை 4 மாநிலங்களை தொட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் சில இடங்களில் தோற்று இருந்தாலும் கூட, தேசிய அளவில் ஆளும் பாஜகவை எதிர்கொள்ளும் ஒரே கட்சியாக காங்கிரஸ் மட்டுமே உள்ளது என்பதை காண முடிகிறது. எனவே காங்கிரசுடன் எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டால், ஆளும் பாஜகவுக்கு பெரும் சவால் ஏற்படும். கர்நாடகா தேர்தல் முடிந்துள்ள நிலையில் இந்தாண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் மூன்று மாநிலங்களையும் காங்கிரஸ் வென்றது. ஆனால் மத்திய பிரதேசத்தில் தற்போதைய விமான போக்குவரத்து துறை அமைச்சரான ஜோதிராதித்ய சிந்தியா (காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவினார்) நடத்திய அரங்கேற்றத்தால், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழந்தது. தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

தற்போது கர்நாடகாவில் கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அதே பார்முலாவை வைத்து மேற்கண்ட 3 மாநில தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. எதிர்கட்சி தலைவர்களான நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சரத் பவார், உத்தவ் தாக்கரே போன்ற தலைவர்கள், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்காக காங்கிரசுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், கர்நாடகாவில் காங்கிரசின் வெற்றி முக்கியத்துவம் பெற்றுள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகளின் கூட்டணி பலமானால், அது பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2014ம் ஆண்டு முதல் நடந்த மாநில மற்றும் தேசிய தேர்தல்களில் பிரதமர் மோடியை மட்டுமே நம்பியிருந்த பாஜகவுக்கு, இனிமேல் ‘மோடி மேஜிக்’ கைக் கொடுக்குமா? என்பது கேள்வியாக உள்ளது. முன்னதாக ெடல்லி, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மோடியின் பிரசாரம் எடுபடாதது போல், கர்நாடகாவிலும் பெரும் பேரணிகளை நடத்திய மோடியின் பிரசாரம் எடுபடவில்லை என்பதே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தென்மாநிலங்களில் பாஜகவின் களம் அகற்றப்பட்ட நிலையில், டெல்லி, மேற்குவங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் அதே நிலை நீடிக்கிறது. எனவே இந்தாண்டு நடக்கும் 3 மாநில சட்டப் பேரவை தேர்தல், அடுத்தாண்டு நடக்கும் மக்களவை தேர்தல் ஆகியன பாஜகவுக்கு பெரும் சவாலாக அமையும்.

The post 4வது மாநிலமாக கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றியதால் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் உற்சாகம்: 2024 மக்களவை தேர்தலுக்கான அரசியல் வியூகம் மாறுகிறது appeared first on Dinakaran.

Related Stories: