கவுட் வருவது ஏன்…தீர்வு என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்

ஆரோக்கியமற்ற நவீன உணவு பழக்கங்களுக்கு நாம் மாற மாற அதற்கு ஏற்றவாறு நோய்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்தவகையில், உணவு பழக்கங்களால் மூட்டுகளில் அழற்சியை ஏற்படுத்தும் ஒரு வகையான நோய் கவுட். இந்த கவுட் மூட்டுவலி அநேகம் பேருக்கு வருகிறது. உலக அளவில் 100 பேரில்
8 பேருக்கு இந்த நிலைமை உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. கவுட் என்பது என்ன, எதனால் வருகிறது, தீர்வு என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்.

கவுட் என்பது என்ன.. எதனால் வருகிறது..

கவுட் என்பது சின்னச் சின்ன எலும்பு மூட்டுகளில் ஏற்படும் ஓர் அழற்சி நிலை. இது பெரும்பாலும் கால் பெருவிரல் எலும்பு மூட்டில் ஏற்படுகிறது. சிலருக்கு, கை விரல், மணிக்கட்டு, முழங்கை மூட்டுகளிலும் இது ஏற்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது என்றால், உடலில் யூரிக் அமிலம் அதிகளவில் சுரக்கும்போது அது மூட்டுகளில் சென்று தங்கி வலியை ஏற்படுத்துகிறது. இது மற்ற மூட்டுவலிகளை போன்று இல்லாமல், திடீரென்று கால் பெருவிரலுக்கு அருகில் உள்ள மூட்டில் கடுமையான வலியை ஏற்படுத்தும்.

யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது..

யூரிக் அமில பாதிப்பு பெரும்பாலும் 30 வயதில் இருந்து 60 வயதுள்ள ஆண்களுக்கே அதிகமாக ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் நின்றபிறகு இந்தப் பிரச்னை ஆரம்பிக்கிறது. பரம்பரை ரீதியாகவும் இது ஏற்படலாம். நீரிழிவு உள்ளவர்களுக்கு, சோரியாசிஸ் நோய் உள்ளவர்களுக்கு, ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமாக உள்ளவர்களுக்கு, மது அருந்துபவர்களுக்கு, உடற்பருமன் உள்ளவர்களுக்கு இது இளம் வயதிலேயே வந்துவிடுகிறது.

அசைவ உணவை அதிகம் சாப்பிடுவோருக்கும், இரு சக்கர வாகனங்களில் வெயிலில் அதிக நேரம் அலைபவர்களுக்கும், கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ‘லீவோ டோப்பா’ (Levodopa) எனும் மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு இந்த அமிலம் அதிகரிக்கும். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்றால், யூரிக் அமிலம் அதிகமாக சுரக்கும் அனைவருக்குமே கவுட் வரும் என்று சொல்ல முடியாது. யூரிக் அமிலம் நார்மலாக இருப்பவர்களுக்கு கவுட் வராது என்றும் சொல்ல முடியாது. உடலில் கிரிஸ்டல் படியும்போதுதான் அது கவுட்டாக மாறுகிறது.

யூரிக் அமிலம் என்பது என்ன..

யூரிக் அமிலம் என்பது நமது உடலில் சுரக்கும் ஒருவகையான திரவமாகும். பொதுவாக இது சிறுநீரகத்தின் வழியாக வெளியேறிவிடும். அப்படி வெளியேறாமல் தங்கும்போது உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும். மேலும், ஒரு சிலருக்கு தானாக யூரிக் அமிலம் அதிகளவில் சுரக்கும் தன்மை இருக்கும். அவர்களுக்கும் உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும். இது கூடுதலாக சுரக்கும்போது, இந்த திரவமானது மூட்டுகளில் சென்று தங்கி நாளடைவில் கிரிஸ்டலாக படிந்துவிடும்.

அறிகுறிகள்..

கால் கட்டை விரலுக்கு அருகில் உள்ள மூட்டில் வீக்கம் காணப்படுவது இதன் முக்கிய அறிகுறி. அந்த இடம் சிவந்து காணப்படும்; வீக்கத்தைத் தொட்டால் சூடாக இருக்கும்; வலி கடுமையாகும். இரவு நேரத்தில் வலி இன்னும் கடுமையாகும். பகலில் போகப்போக வலி குறையும்.

சிகிச்சை முறைகள்..

பலருக்கு இந்த வலி எந்த சிகிச்சையும் எடுக்காமலேயே ஒரு வாரத்தில் சரியாகிவிடும். சிலருக்கு, சில வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து மறுபடியும் அந்த வீக்கமும் வலியும் வந்து சேரும். மேலும், ‘கவுட்’ மூட்டுவலி அவ்வப்போது வருவதும் போவதுமாக இருக்கும். ஒருவருக்கு இந்த கவுட் இருப்பது கண்டறிந்ததும், மூட்டுகளில் ஏற்படும் அழற்சியை குறைக்க அவருக்கு வலி நிவாரண மாத்திரைகள் முதலில் வழங்கப்படும். இந்த மாத்திரை வலியை மட்டும் குறைக்காமல் கிரிஸ்டல்களாக படிந்து அமிலத்தை கரைத்து வெளியேற்றும்.

இது தவிர கவுட்டுக்கு என்றே ஸ்பெஷலான மாத்திரைகள் இருக்கிறது. அதுவும் வழங்கப்படும். சிலருக்கு பரம்பரை காரணமாக இந்த யூரிக் அமிலம் அதிகம் சுரக்கும். இது தவிர பெரும்பாலும் நாம் உண்ணும் உணவுகள் மூலமே இது அதிகரிக்கிறது. மேலும், மது அருந்துபவர்களுக்கு யூரிக் அமிலம் அதிகம் சுரக்க வாய்ப்பு உள்ளது. அதிலும் பீர் குடிப்பவர்களுக்கு இது அதிகம் சுரக்க வாய்ப்புள்ளது.

பாதிப்புகள் என்னென்ன..

சாதாரணமாக ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் பெண்களுக்கு 6 மி.கி. வரையிலும் ஆண்களுக்கு 8 மி.கி. வரையிலும் யூரிக் அமிலம் இருந்தால், அது இயல்புநிலை. இந்த அளவு அதிகமாகும்போதுதான் பிரச்னை. இது ரத்தத்தில் பயணிக்கும்போது எலும்பு மூட்டுகளில் படிகங்களாகப் படிகிறது. இதன் விளைவால், ‘கவுட்’ எனும் சிறு கணு மூட்டுவலி வருகிறது. மேலும், இந்த அமிலம் சிறுநீரகத்துக்குச் சென்று சிறுநீரில் வெளியேறும்போது சிறுநீரகக் கற்களாக மாறுகிறது. அப்போது சிறுநீரகங்களையும் பாதிக்கிறது.

மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்கள் உள்ளவர்களுக்கு இந்த அமிலம் அதிகரிப்பது ஆபத்தானது. அதிகரிக்கும் ஒவ்வொரு மில்லி கிராமும் இதயநோயை அதிகரித்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே இதயம் செயல் இழந்திருந்தால் (Heart failure), அந்த நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது.

யூரிக் அமிலம் அதிகரிக்கும் உணவுகள்

யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் உணவுகள் என்றால் சிகப்பு இறைச்சி என்று சொல்லப்படும் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும் இந்த யூரிக் அமிலம் அதிகம் சுரக்க வாய்ப்புள்ளது. அதுபோன்று பால், தயிர் போன்றவற்றை அதிகளவில் உண்பவர்களுக்கும் யூரிக் அமிலம் அதிகளவில் சுரக்கும். மேலும், அதிக இனிப்பு சுவை கொண்ட பழச்சாறுகள் அருந்தும்போது யூரிக் அமிலம் அதிகம் சுரக்கும்.

தற்காத்துக் கொள்ளும் வழிகள்

ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவது ஒன்றுதான். பெரும்பாலும் கவுட்டில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழி ஆகும். சிறு தானிய உணவுகள், முழு தானிய உணவுகள், பழங்கள், காய்கறிகள் நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால் யூரிக் அமிலம் அதிகரிப்பதில்லை. பெரும்பாலும் கொழுப்பு அதிகமுள்ள அசைவ உணவிலும் மதுவிலும்தான் யூரிக் அமிலம் அதிகம். உதாரணமாக, 100 கிராம் கோழி ஈரல் சாப்பிட்டால் 313 மில்லி கிராம் அளவிலும், 100 மி.லி. மது குடித்தால் 1,810 மில்லி கிராம் வரையிலும் யூரிக் அமிலம் ரத்தத்தில் உற்பத்தியாகிறது. இந்த அளவு யூரிக் அமிலத்தைச் சிறுநீரில் வெளியேற்ற சிறுநீரகங்கள் சிரமப்படுவதால் அவை முழுமையாக வெளியேறாமல் தேங்கிவிடுகிறது.

எனவே, கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி போன்ற சிகப்பு இறைச்சி, ஈரல், மீன், நண்டு போன்ற அசைவ உணவுகளை அதிகமாக உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.
மது அருந்துவதை நிறுத்த வேண்டும். அதிலும் பீர் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

வெள்ளைச் சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட கேக், ரொட்டி, ஐஸ்கிரீம் போன்ற அதிக இனிப்புள்ள உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இனிப்பு சுவை அதிகமுள்ள பழங்களை பழச்சாறுகளாக அருந்துவதை தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. உடற்பருமன் உள்ளவர்கள் தங்கள் உடல் எடையைக் குறைத்தாலே இந்த அமிலப் பிரச்னையும் சரியாகிவிடும். தினமும் ஓர் உடற்பயிற்சி செய்தால் இந்த அமிலம் கட்டுக்குள் இருக்கும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post கவுட் வருவது ஏன்…தீர்வு என்ன? appeared first on Dinakaran.

Related Stories: