கில், பன்ட் அபார சதம்: வங்கதேசத்துக்கு 515 ரன் இலக்கு.! அஷ்வின் சுழலில் திணறல்

சென்னை: இந்திய அணியுடனான முதல் டெஸ்டில் 515 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தும் வங்கதேச அணி, 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்துள்ளது. முன்னதாக, இந்தியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கில், பன்ட் இருவரும் சதம் விளாசி அசத்தினர். சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடைபெறும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 376 ரன்னும், வங்கதேசம் 149 ரன்னும் எடுத்து ஆல் அவுட்டாகின. இதையடுத்து, 227 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன் எடுத்திருந்தது. சுப்மன் கில் 33 ரன், ரிஷப் பன்ட் 12 ரன்னுடன் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். முதல்நாள் இரவு பெய்த மழை காரணமாக ஆடுகளம், மைதானத்தில் பாதிப்பு ஏதுமில்லை.

பொறுப்புடன் விளையாடிய கில், பன்ட் அடுத்தடுத்து அரை சதம் அடித்தனர். இந்த ஜோடியை பிரிக்க வங்கதேச வீரர்கள் மேற்கொண்ட முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. அதிரடியில் இறங்கிய பன்ட், சுப்மனை முந்திச் சென்று சதத்தையும் நிறைவு செய்தார். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 167 ரன் சேர்த்தனர். பன்ட் 109 ரன் (128 பந்து, 13 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி மிராஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 632 நாள் இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் மீண்டும் களமிறங்கிய பன்ட், சதம் விளாசி ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார். அடுத்து வந்த கே.எல்.ராகுல் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, கில்லும் சதத்தை நிறைவு செய்தார். இந்தியா 64 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்த நிலையில், 2வது இன்னிங்சை முடித்துக்கொள்வதாக கேப்டன் ரோகித் அறிவித்தார். கில் 119 ரன் (176 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்), ராகுல் 22 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் மெஹிதி ஹசன் மிராஸ் 2, தஸ்கின் அகமது, நஹித் ராணா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 515 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. ஜாகிர் ஹசன், ஷத்மன் இஸ்லாம் இணைந்து துரத்தலை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். ஜாகிர் 33 ரன் எடுத்து பும்ரா வேகத்தில் ஜெய்ஸ்வால் வசம் பிடிபட்டார். ஷத்மன் 35, மோமினுல் ஹக், முஷ்பிகுர் ரகிம் தலா 13 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் மூழ்க, வங்கதேசம் தடுமாறியது. ஒரு முனையில் கடுமையாகப் போராடிய கேப்டன் நஜ்முல் ஷான்டோ அரை சதம் அடித்தார். மூன்றாம் நாள் முடிவில் வங்கதேசம் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்துள்ளது. ஷான்டோ 51 ரன், ஷாகிப் அல் ஹசன் 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 6 விக்கெட் இருக்க, வங்கதேச அணிக்கு இன்னும் 357 ரன் தேவைப்படுவதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த நிலையில் இன்று பரபரப்பான 4வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post கில், பன்ட் அபார சதம்: வங்கதேசத்துக்கு 515 ரன் இலக்கு.! அஷ்வின் சுழலில் திணறல் appeared first on Dinakaran.

Related Stories: