காசாவில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை…என்ன நடக்கிறது என புரியாத சூழல் : செய்தியாளர் குமுறல்

ஜெருசலேம் : ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல்களுக்கு பதிலடியாக கடந்த 3 வாரமாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 7000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காசாவின் பெரும்பகுதி தரைமட்டம் ஆன நிலையில், தரைவழியாகும் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கான ஆயிரக்கணக்கான வீரர்கள் காசா பகுதிக்குள் நுழைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய வான்வழி தாக்குதலில் அடுக்குமாடி கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதையடுத்து நேற்று இரவு முழுவதும் விடிய விடிய குண்டு மழை பொழிந்தும் ஏவுகணைகளை வீசியும் இஸ்ரேல் பதிலுக்கு தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதன் எதிரொலியாக காசாவில் இணைய வசதி மற்றும் மொபைல் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் காசா மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.இந்த நிலையில் காசா மருத்துவமனையில் இருக்கும் செய்தியாளர் ஒருவர் பகிர்ந்துள்ள தகவலில்,”நாங்கள் அல்-அக்ஸா மருத்துவமனையில் இருக்கிறோம்; என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. WIFI, தொலைத்தொடர்பு சேவை என எதுவுமில்லை; ஆம்புலன்ஸுக்கோ, வேறு விஷயங்களுக்கோ யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. குண்டுகளிலிருந்து வரும் வெளிச்சம் மட்டுமே வானத்தை பிரகாசமாக்கிக்கொண்டிருக்கிறது. 500 மீட்டர் தொலைவில் இருப்பவர்களைக்கூட எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஆம்புலன்ஸ் வைத்திருப்பவர்களும், மருத்துவப் பணியாளர்களும் எந்த இடங்களில் குண்டுகள் போடப்படுகிறதென செய்தியாளர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், செய்தியாளர்களுக்கே என்ன நடக்கிறது என தெரியவில்லை; நாங்கள் நடப்பதை சொல்லவே விரும்புகிறோம். ஆனால், என்ன நடக்கிறது என புரியாத சூழலில் தான் நாங்களே இருக்கிறோம்,”இவ்வாறு தெரிவித்துள்ளார். துருக்கி சிம்கார்டு வைத்துள்ளதால் காசாவில் இருந்த செய்தியாளர் பகிர்ந்த தகவல் சமூகவலைதளம் மூலமாக வெளிச்சத்திற்கு வெளிவந்துள்ளது.

The post காசாவில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை…என்ன நடக்கிறது என புரியாத சூழல் : செய்தியாளர் குமுறல் appeared first on Dinakaran.

Related Stories: