2022-23ம் நிதியாண்டில் மட்டும் ₹2.40 லட்சம் கோடியை அள்ளியது ரயில்வே: பயணிகள் வருவாய் மட்டும் 61% அதிகம்

புதுடெல்லி: 2022-23 நிதியாண்டில் மட்டும் ₹2.40 லட்சம் கோடி வருவாயை இந்திய ரயில்வே அள்ளியது. பயணிகள் வருவாய் மட்டும் 61% அதிகரித்துள்ளது. இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘2022-23 நிதியாண்டில் இந்திய ரயில்வே ₹2.40 லட்சம் கோடி வருவாய் சாதனை படைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட ₹ 49,000 கோடி அதிகமாகும். கடந்த 2022-23ம் ஆண்டில், சரக்கு வருவாய் ₹ 1.62 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் அதிகமாகும். பயணிகள் வருவாய் 61 சதவீதம் அதிகரித்து ₹63,300 கோடியை எட்டியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஓய்வூதியச் செலவினங்களை இந்திய ரயில்வேயால் சமாளிக்க முடிகிறது. வருவாய் மற்றும் செலவின மேலாண்மையை சரி செய்ததன் மூலம் ரயில்வேயின் மூலதன முதலீடு ₹3,200 கோடியாக உயர்ந்துள்ளது.

போக்குவரத்து வருவாய் அடிப்படையில், 2021-22ல் 39,214 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2022-23ல் ₹ 63,300 கோடி வருவாயாக உயர்ந்தது. கோச்சிங் வருவாய் 2021-22ல் ₹ 4,899 கோடி, 2022-23ல் ₹ 5,951 கோடியை ஈட்டியது. சன்ட்ரீஸ் வருவாய் 2022-23 நிதியாண்டில் ₹ 8,440 கோடி, 2021-22ல் ₹ 6,067 கோடியாக இருந்தது. மொத்த வருவாய் 2021-22ல் ₹ 1,91,278 கோடியாக இருந்த நிலையில் 2022-23ல் ₹ 2,39,803 கோடியானது. 2021-22ல் ₹ 2,06,391 கோடியாக இருந்த மொத்த ரயில்வே செலவினம் 2022-23ல் ₹ 2,37,375 கோடியாக அதிகரித்தது. 2022-23ல் செயல்பாட்டு விகிதம் 98.14 சதவீதமாக இருந்தது. ரயில்வே பாதுகாப்பு நிதியில் 2021-22ல் ₹ 11,105 கோடியும், 2022-23ல் ₹ 30,001 கோடியும் செலவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 2022-23ம் நிதியாண்டில் மட்டும் ₹2.40 லட்சம் கோடியை அள்ளியது ரயில்வே: பயணிகள் வருவாய் மட்டும் 61% அதிகம் appeared first on Dinakaran.

Related Stories: