எரிபொருள் நிரப்புவதற்காக உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம் சென்னை வந்தது

சென்னை: உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை பழைய விமான நிலையம் வந்தது. நெதர்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு ஏர்பஸ் விமானம் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் பிரான்ஸ் நாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பயணிகள் விமானம் மற்றும் சரக்கு விமானங்களையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில், பல்வேறு வடிவிலான பெரிய ரக பொருட்களை, சரக்கு விமானத்தில் ஏற்றிச் செல்வதற்கு வசதியாக, திமிங்கலம் வடிவில் சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் எனும் “பெலுகா” என்ற புதிய சரக்கு விமானத்தை, 1995ம் ஆண்டில் ஏர்பஸ் நிறுவனம் தயாரித்து அறிமுகம் செய்தது. இந்த சரக்கு விமானம் ஒரே நேரத்தில் 47,000 கிலோ (47 டன்) எடை சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் உடையது.

இந்த பெரிய ரக சரக்கு விமானம், நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இரவு 9.30 மணியளவில் சென்னை பழைய விமான நிலையம் வந்தது. உலகிலேயே மிகப்பெரிய “ஏர்பஸ் பெலுகா ” சரக்கு விமானம் கடந்த 2022 ஜூலை 11ம் தேதி முதன்முறையாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து எரிபொருள் நிரப்பி விட்டு தாய்லாந்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றது.இந்நிலையில், தற்போது ஓராண்டு கழித்து, மீண்டும் இரண்டாவது முறையாக சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்தது.

இதுபற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஏர்பஸ் பெலுகா சரக்கு விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு வந்தது. இந்த வகை பெரிய சரக்கு விமானம், சென்னைக்கு வருவது இது, இரண்டாவது முறை. கடந்த ஆண்டு இதே ஜூலை மாதம் முதன்முறையாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து, சென்னை வந்து எரிபொருள் நிரப்பிய பின், தாய்லாந்து பட்டாயாவிற்கு புறப்பட்டுச் சென்றது’’ என்றார்.

The post எரிபொருள் நிரப்புவதற்காக உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம் சென்னை வந்தது appeared first on Dinakaran.

Related Stories: