ஓராண்டில் மட்டும் முதியோர் உதவி தொகையில் 27 லட்ச ரூபாய் மோசடி: கணினி ஆபரேட்டர் பணி நீக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் முதியோர் உதவித்தொகை திட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.27 லட்சம் மோசடி செய்த கணினி ஆபரேட்டர் பணி நீக்கம் செய்யப்பட்டார். தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தாலுகாவிலும் தனி தாசில்தார்களை நியமித்து முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூ.1200 அரசு உதவி தொகையாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை தாலுகாவில் முதியோர் உதவி தொகை வினியோகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.27 லட்ச மோசடி நடந்துள்ளது. முதியோர்களுக்கு உதவி தொகை பரிவர்த்தனை செய்யும் தற்காலிக கணினி ஆபரேட்டராக தேனி மாவட்டத்தை சேர்ந்த அம்பேத்ராஜா என்பவர் பணியாற்றி வந்தார். அவர் கடந்த ஓராண்டாக பணியாற்றி வரும் நிலையில் தனி தாசில்தார்கள் மட்டும் இதுவரை 2 பேர் பணிமாறுதலில் சென்று விட்டனர். தற்போது புதிய தாசில்தார் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சென்னை அலுவலகத்தில் உள்ள தணிக்கை குழுவினர் புதுக்கோட்டை தனி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து மட்டும் முதியோர்களுக்கு பரிவர்த்தனை செய்யப்படும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை ஒரே வங்கி கணக்கிற்கு செல்வதை கண்டு சந்தேகமடைந்தனர். இதையடுத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனி தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று, அங்கு முதியோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்கான பணப்பரிவர்த்தனை ஆய்வு செய்தனர். இதில் நூதன முறையில் மாதந்தோறும் முதியோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையில் 50 முதல் 70 பயனாளிகளுக்கு வழங்காமல், அவை அம்பேத்ராஜா வங்கிக் கணக்கிற்கு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல் ரூ.27 லட்சம் வரை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணையை துரிதப்படுத்தியது. தொடர்ந்து அம்பேத்ராஜாவிடம் நடத்திய விசாரணையில், பணத்தை ஷேர் மார்க்கெட்டில் இழந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து முறைகேடாக எடுத்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் அவரை பணி நீக்கம் செய்தனர்.

 

The post ஓராண்டில் மட்டும் முதியோர் உதவி தொகையில் 27 லட்ச ரூபாய் மோசடி: கணினி ஆபரேட்டர் பணி நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: