எரிபொருள் விலை, வாகன பராமரிப்பு செலவு அதிகரிப்பால் உணவு டெலிவரி நிறுவன ஊழியர்களின் வருவாய் குறைந்தது… ஆய்வில் தகவல்!!

சென்னை : பரபரப்பான சென்னை போன்ற பெருநகரங்களில் முக்கிய சேவை ஆற்றும் உணவு டெலிவரி ஊழியர்களின் வருவாய் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. எரிபொருள், வாகன பராமரிப்பு செலவு போன்றவை அதிகரித்ததே இதற்கு காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. படித்த இளைஞர்கள் பலர் பகுதி நேரமாகவும் முழு நேரமாகவும் ஸ்விக்கி, சோமாட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். சென்னையில் மட்டும் ஒரு லட்சத்திறகும் மேற்பட்ட இளைஞர்கள் உணவு டெலிவரி பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இவர்களின் வருமானம் குறைந்து கொண்டே வருவது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. நேஷனல் கவுன்சில் ஆப் அப்லைட் எக்கனாமிக் ரிசர்ச் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ம் ஆண்டில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் வருமானம் குறைந்துள்ளது. தினசரி 11 மணி நேரம் பணிபுரியும் ஊழியர்களின் மாதாந்திர வருமானம் 2019ம் ஆண்டு ரூ. 13,470 ஆக இருந்தது. இது 2022ம் ஆண்டில் ரூ.11,963 ஆக குறைந்துள்ளது. தினசரி 5 மணி நேரம் பணியாற்றும் ஒரு ஊழியர் 2019ம் ஆண்டில் ரூ.7,999 மாதாந்திர வருமானம் ஈட்டிய நிலையில், 2022ல் இது ரூ.7,157 ஆக குறைந்துள்ளது. பண வீக்கம், பெட்ரோல் விலை உயர்வு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் இந்த வருவாய் குறைவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

The post எரிபொருள் விலை, வாகன பராமரிப்பு செலவு அதிகரிப்பால் உணவு டெலிவரி நிறுவன ஊழியர்களின் வருவாய் குறைந்தது… ஆய்வில் தகவல்!! appeared first on Dinakaran.

Related Stories: