சுற்றுப்புறப்பகுதியில் கனமழை: பொன்னை ஆற்றில் திடீர் வெள்ளம்


பொன்னை: பொன்னை சுற்றுப்புற பகுதிகளிலும், தமிழக-ஆந்திர எல்லையோர பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட பொன்னை பகுதிகளிலும், தமிழக-ஆந்திர எல்லைேயார பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழைபெய்து வருகிறது. அதேபோல் நேற்று இரவும் பொன்னை சுற்றுப்புற பகுதியில் பரவலாக பலத்த மழை பெய்தது. நள்ளிரவு மற்றும் இன்று காலையும் மழை பெய்தது. இதனால் அங்கு 44.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் தொடர் மழையால் பொன்னை ஆற்றில் இன்று காலை முதல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து காரணமாக வெள்ளம் அதிகரித்து வருகிறது. திடீர் வெள்ளத்தால் பொன்னை, அணைக்கட்டு பகுதியில் உள்ள கால்வாய்கள் திறக்கப்பட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேல்பாடி, இளையநல்லூர், வசூர், குமணந்தாங்கல் உள்ளிட்ட 90 ஏரிகள் நிரம்பி வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில் தமிழகம் மற்றும் ஆந்திர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொன்னையாற்றில் இனி வரும் நாட்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் இருக்கும்படி வருவாய்த்துறை, காவல்துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post சுற்றுப்புறப்பகுதியில் கனமழை: பொன்னை ஆற்றில் திடீர் வெள்ளம் appeared first on Dinakaran.

Related Stories: