காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை படங்களை திரையிட அனுமதிக்க வேண்டும்: முதல்வரிடம் கோரிக்கை

சென்னை: திரையரங்கங்களில் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை படங்களை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில், தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளரும் எம்எல்ஏவுமான ஐட்ரீம்ஸ் மூர்த்தி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி என்.ராமசாமி, செயலாளர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் வி.டி.எல்.சுப்பு, செயற்குழு உறுப்பினர் டி.என்.டி.ராஜா, பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் அருள்பதி, துணை தலைவர் கே.ராஜன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த சந்திப்பின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: திரையரங்கங்களில் தமிழ்நாடு அரசால் 8 விழுக்காடு உள்ளாட்சி வரி விதிக்கப்படுகின்றது. கடந்த ஆட்சி காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த 8% வரியை நீக்க வேண்டுமென வலியுறுத்தினோம். இது குறைக்கப்பட்டால் டிக்கெட் விலையும் குறையும். திரைப்படங்கள் திரையிடப்படும் நேரத்தை காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை அதிகரிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் மானியமும், வரிவிலக்கு சலுகையும் வழங்கப்பட்டது. பிறகு வந்த ஆட்சியில் அது நீக்கப்பட்டது. எனவே தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மானியம், வரிச்தலுகையை மீண்டும் வழங்க முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம். எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறினார். மேலும் கலைஞர் நூற்றாண்டு விழாவை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் 7 நாள் கொண்டாட முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை படங்களை திரையிட அனுமதிக்க வேண்டும்: முதல்வரிடம் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: