இடைக்கோடு பேரூராட்சியில் சாதனை வாகனங்களை தாங்களே ஓட்டி குப்பைகளை சேகரிக்கும் பெண் தூய்மைப்பணியாளர்கள்: பொதுமக்கள் பாராட்டு குவிகிறது

அருமனை: இடைக்கோடு பேரூராட்சி துப்புரவு பணியாளர்களில் எட்டு பேர், குப்பை வாகனங்களை தாங்களாகவே ஓட்டிச்சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.
குமரி மாவட்டம் இடைக்கோடு பேரூராட்சியில் துப்புரவு பணிகளில் புஷ் கார்ட் வண்டி என்று அழைக்கக்கூடிய கைத்தள்ளு வண்டியில்தான் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வந்தனர். சுமார் 7 கி.மீ சுற்றளவில் நடந்தே சென்று சேகரித்து வந்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசால் இடைக்கோடு பேரூராட்சிக்கு 14 புதிய குப்பை எடுத்து செல்லும் பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன. ஆனால் 14 வாகனங்களுக்கும் ஓட்டுநர் இல்லை. இந்த சவாலான சிரமத்தை பேரூராட்சி நிர்வாகம் சுலபமாக கையாண்டது. அதன்படி தற்போது துப்புரவு பணியாளர்களை ஓட்டுனர்களாக மாற்றி அவர்களுடைய பணி சுமையையும் பேரூராட்சியின் ஓட்டுனர் பற்றாக்குறையையும் பேரூராட்சி நிர்வாகம் நிவர்த்தி செய்து இருக்கிறது. இதன்படி 13 தூய்மைப்பணியாளர்களில் 8 பேருக்கு 2 மாதம் ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டது.

தற்போது அவர்கள் இலகுவாக, விரைவாக அப்பகுதிகளுக்குச் சென்று குப்பைகளை எடுத்து வருகின்றனர். அத்தகைய ஒரு மாற்றத்திற்கான காரணம் இவர்களாலும் இயலும் என்ற நம்பிக்கையை ஊட்டி இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சி ஆகும். ராஜேந்திரன் மனைவி கங்கா (46), முருகேசன் மனைவி லதா (43), வில்சன் ஜெப சிங் மனைவி திவ்யா(33), பிரான்சிஸ் மனைவி சிமிலா (34), மனோகரன் மனைவி நாகேஸ்வரி (39), ஜோசப் செல்வராஜ் மனைவி லத்தீஸ் மேரி (43), ரமேஷ் மனைவி அனிதா(46), ஜெயன் மனைவி சுமித்ரா (42) ஆகிய துய்மைப் பணியாளர்கள் அதிகாலையில் துப்புரவு பணிகளை தாங்களே வாகனம் ஓட்டிச்சென்று மேற்கொள்ளும் சாதனையாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். குப்பை வண்டி ஓட்டுவதும் தானே குப்பை அள்ளிச் செல்வதும் நானே என்று துணிச்சலோடு இவர்கள் இந்த பணியை மேற்கொள்கின்றனர். இடைக்கோடு பேரூராட்சியில் முன்மாதிரியாக திகழும் துப்புரவு பணியாளர்களை பேரூராட்சி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

The post இடைக்கோடு பேரூராட்சியில் சாதனை வாகனங்களை தாங்களே ஓட்டி குப்பைகளை சேகரிக்கும் பெண் தூய்மைப்பணியாளர்கள்: பொதுமக்கள் பாராட்டு குவிகிறது appeared first on Dinakaran.

Related Stories: