சேலத்தில் கடன் தொல்லையால் விபரீத முடிவு; தந்தை, மனைவி, மகனை கொன்று சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை: தாய்க்கு தீவிர சிகிச்சை; உருக்கமான கடிதம்

சேலம்: சேலத்தில் தந்தை, மனைவி, மகனை விஷம் கொடுத்து கொன்று விட்டு சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அரை மயக்கத்தில் உயிர்பிழைத்த தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் கோரிமேடு சட்டக்கல்லூரி அருகே எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சிவராமன் (85). இவர் பெங்களூர் ஏர்போர்ட்டில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். முதல் மனைவி இறந்துவிட்டார். 2வது மனைவி வசந்தா (56). இவர்களுக்கு சந்துரு (40), திலக் (38) என்ற 2 மகன்கள். இன்ஜினியரான சந்துரு, திருமணமாகி பெங்களூருவில் தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறார். திலக் சென்னையில் தனியார் கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து, கொரோனா காலத்தில் சேலத்திற்கு திரும்பி வீட்டில் இருந்து வேலை செய்துள்ளார்.

அவருக்கு மகேஸ்வரி (35) என்ற மனைவியும், சாய்கிரிஷ் சாந்த் என்ற 6 வயது மகனும் உள்ளனர். மகன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால் அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் தாய் வசந்தா அரை மயக்க நிலையில் கதவை திறந்து கூச்சல் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது ஒரு அறையில் சிவராமன் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். மாடியில் மகேஸ்வரி, சாய்கிரிஷ்சாந்த் ஆகியோர் வாயில் நுரைதள்ளிய நிலையிலும், திலக் தூக்கில் தொங்கிய நிலையிலும் இறந்து கிடந்தனர். தகவலறிந்து கன்னங்குறிச்சி போலீசார் வந்து வசந்தாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

வீட்டில் திலக் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில், ‘‘ஆன்லைன் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பலரிடம் கடன் வாங்கினேன். பாதியை திருப்பிச் செலுத்தி விட்டேன். மீதி கடனை என்னால் கொடுக்க முடியவில்லை. இதனால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்கிறோம். கடன் வாங்கி மகனுக்கு சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இதனால் மனவேதனையில் இந்த முடிவை எடுக்கிறோம்,’’ என்று எழுதியிருந்தார். விசாரணையில், நேற்று முன்தினம் மாலை திலக் மற்றும் அவரது மனைவி கடைக்கு சென்றுள்ளனர். அப்போது திலக் விஷ மாத்திரைகளை வாங்கி வந்துள்ளார்.

இரவில் சாப்பிட்ட பின்னர் நன்றாக தூக்கம் வரும் எனக் கூறி அந்த விஷமாத்திரையை மனைவி, மகன், தந்தை, தாய்க்கு கொடுத்துள்ளார். பின்னர் திலக் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். இதில் தந்தை, மனைவி, மகன் இறந்துவிட, தாய் மட்டும் தப்பியுள்ளார். தற்கொலை செய்வதற்கு முன் அண்ணன் சந்துருவுக்கு திலக் வாட்ஸ் அப்பில், ஆன்லைனில் தொழில் செய்ததில் நஷ்டம் அடைந்து விட்டேன். இதனால் கடன் தொல்லை, மகனுக்கு உடல் நல பிரச்னையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம் என மெசேஜ் அனுப்பியுள்ளார். அவர் உடனடியாக பக்கத்து வீட்டுக்காரர்களை தொடர்பு கொண்டபோது அவர்கள் அனைவரும் தூங்குவதாக தெரிவித்துள்ளனர். ஷேர் மார்க்கெட்டில் பணம் கட்டியதால் நஷ்டம் ஏற்பட்டதா அல்லது ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்தாரா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

The post சேலத்தில் கடன் தொல்லையால் விபரீத முடிவு; தந்தை, மனைவி, மகனை கொன்று சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை: தாய்க்கு தீவிர சிகிச்சை; உருக்கமான கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: