*எம்எல்ஏ நடவடிக்கை
வந்தவாசி : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொட்டை கிராமத்தில் தாயை இழந்து தவிக்கும் 4 மாணவிகளை பராமரிக்க முடியாமல் பாட்டி அவதிக்குள்ளாகி வருவதை தொடர்ந்து `அன்பு கரங்கள்’ திட்டம் மூலமாக உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ அம்பேத் குமார் உறுதி அளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொட்டை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சுமதி. தம்பதிக்குசுஜாதா(18), நித்யா(16), நிவேதா(15), தமிழரசி(14) என 4 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தாய் சுமதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
மனைவி இறந்த துக்கத்தில் வெங்கடேசன் மது போதைக்கு அடிமையாகி வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறாராம். வெங்கடேசனின் தாய் எல்லம்மாள் (60) கடந்த 2 ஆண்டுகள் முன் வரை சென்னை பூந்தமல்லியில் உள்ள மதுபான கம்பெனியில் பாட்டில் கழுவும் வேலை செய்து தனது பேத்திகளை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. வயது முதிர்வு காரணமாக அவராலும் வேலைக்கு செல்ல முடியாததால் 4 மாணவிகளையும் படிக்க வைக்க முடியாமல் கடும் சிரமமடைந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே சென்னை போரூர் பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வரும் வெங்கடேசனின் அண்ணன் முனியாண்டி என்பவர் இந்த 4 மாணவிகளையும் அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் சேர்த்துள்ளார். இவர்களில் மூத்த மகள் சுஜாதா அரசு கலைக்கல்லூரியிலும் படித்து வருகிறார்.
இருப்பினும் தம்பியின் மகள்களை பராமரிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று கொட்டை கிராமத்திற்கு வந்த எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாரிடம் எல்லம்மாள் தனது பேத்திகளின் நிலை குறித்து முறையிட்டார்.
தமிழக முதல்வர் தாய் இழந்த குழந்தைக்கு `அன்புக்கரங்கள்’ திட்டம் மூலமாக மாதந்தோறும் ரூ.2000 வழங்குவதாகவும் இந்த திட்டத்தில் தொடர்ந்து உயர்கல்வி செல்லவும் உதவித்தொகை கிடைக்கும். அந்த திட்டத்தில் சேர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் மாணவிகளை முழுவதுமாக சமூக நலத்துறையிடம் ஒப்படைத்தால் பள்ளி, கல்லூரி மற்றும் திருமண செலவை சமூக நலத்துறை ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்தார்.
தற்போது 4 பெண் பிள்ளைகளுக்கும் மறுவாழ்வு கிடைத்துள்ளால் அந்த குடும்பத்தினர் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது திமுக ஒன்றிய செயலாளர் கே.ஆர்.பி.பழனி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் லட்சுமி, மாவட்ட பிரதிநிதி ஆதிகேசவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.
