திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி புதுப்பாலம் சத்தியமூர்த்தி மேட்டு தெருவை சேர்ந்தவர்கள் சேகர் – செல்வி தம்பதியர். இவர்களது ஒரே மகள் துர்கா. சேகர் மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றியவர். தாய் செல்வி பல வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். துர்கா மன்னார்குடியில் உள்ள தூய வளனார் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தார். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் படித்து இயற்பியல் பட்டம் பெற்றார்.
தூய்மை பணியாளரின் மகள் துர்கா ‘‘கொடிது கொடிது வறுமை கொடிது! அதனினும் கொடிது இளமையில் வறுமை!!” எனும் அவ்வை மூதாட்டியின் வரிகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவர். மதுராந்தகத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவருக்கு மகளை 2015ல் திருமணம் செய்து வைத்த அவரது தந்தை சேகர் கடந்த வருடம் பணியில் இருக்கும் காலத்திலேயே இறந்து விட்டார். திருமணம் ஆன பின்பும் கணவரின் ஆதரவோடு கடந்த 2019ல் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதத் தொடங்கிய துர்கா அந்த முயற்சியை தான் வெற்றி பெறும் வரை கைவிடவே இல்லை. முயற்சிகள் தவறலாம் முயற்சிக்க தவறலாமா? எனும் வாசகம் மட்டும் அவருக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
2023ல் குரூப் 2 முதன்மை தேர்வு எழுதி 2024ல் நேர்முகத் தேர்வில் 30க்கு 30 மதிப்பெண்கள் பெற்றார். காவல்துறையின் முக்கிய பிரிவான எஸ்பிசிஐடியில் அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு வந்தும் தன் தந்தை பணிபுரிந்த நகராட்சி துறையிலேயே பணிபுரிந்து அவருக்கு பேரும் புகழும் சேர்க்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. அதனால் தான் அவர் நகராட்சி ஆணையர் பதவிக்கு விருப்பம் தெரிவித்து அந்த துறையை தேர்வு செய்தார்
இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த விழா ஒன்றில் துர்கா, திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக நியமனம் பெற்று அதற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து பெற்று கொண்டார். இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நகராட்சியில் கடைநிலை ஊழியராக பணியாற்றிய ஒருவரின் மகள் நகராட்சியின் ஆணையராக பதவி ஏற்க இருப்பது, தாய் – தந்தையரின் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற விடாமுயற்சியும், எந்த நிலையில் இருந்தாலும் கல்வியை விடாப்பிடியாக பற்றிக் கொண்டு பயின்று வந்தால் எந்த நிலைக்கு வேண்டுமானாலும் முன்னேறலாம் என்பதற்கு சாட்சியாகும். விரைவில் நகராட்சி ஆணையராக பதவியேற்க இருக்கும் துர்கா இளம் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தான்!
The post தந்தை தூய்மை பணியாளர், மகள் நகராட்சி ஆணையர்: முதல்வர் கையால் பணி ஆணை பெற்று சாதித்த பெண் appeared first on Dinakaran.